ராமர் கோயில் திறப்பு ஓர் ஆன்மிக விழா: ரஜினிகாந்த்

"எல்லோருக்கும் ஒரே விதமான பார்வை இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் குடும்பத்தினரோடு கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்

அயோத்தி ராமர் கோயில் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தவர், திறப்பு விழாவை ஓர் ஆன்மிக விழாவாகப் பார்ப்பதாக குறிப்பிட்டார்.

அயோத்தி கோயில் திறப்பு விழா குறித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தெரிவித்த கருத்துகளை முன்வைத்து செய்தியாளர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பினார்கள். இதுகுறித்து பதிலளித்த அவர், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம். எல்லோருக்கும் ஒரே விதமான பார்வை இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. என்னைப் பொறுத்தவரை அது ஓர் ஆன்மிக விழா என்றார்.

நேற்று விழா முடிந்து திரும்பும்போது, வட இந்திய செய்தியாளர்களையும் அவர் சந்தித்துப் பேசியிருந்தார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா, வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. அதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

இனி ஒவ்வொரு ஆண்டும் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவில் இந்திய திரையுலகைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். தமிழ்த் திரையுலகிலிருந்து ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு குறைவானவர்களே பங்கேற்றிருந்தார்கள். அதில் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த திரைப்பட, கிரிக்கெட் பிரபலங்களுக்கு லக்னௌவில் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கங்கனா ரணாவத், மாதுரி தீட்சித், ஹேமமாலினி, அனுபம் கெர் உள்ளிட்டோரும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in