தமிழ் பக்தர்கள் பெருமானையும் வழிபடுவார்கள், பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள்: ஸ்டாலின்

ஆர்.என். ரவி அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல் தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் உள்ளார்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள் பெருமானையும் வழிபடுவார்கள், பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்துக்களின் உண்மையான எதிரி பாஜகதான் என்பதை அம்பலப்படுத்துவோம் என்பது உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில் ராமர் கோயில் திறப்பு விழா குறித்து தமிழ்நாட்டில் எழுந்த சர்ச்சைகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

"லட்சக்கணக்கில் இளைஞர் பட்டாளம் திரண்டிருந்த சேலம் மாநாட்டின் எழுச்சிகரமான வெற்றியைக் கண்டு மிரண்டு போன திமுகவின் அரசியல் எதிரிகளும், வலிமைமிக்க திராவிட இயக்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை அறிந்துள்ள கொள்கை எதிரிகளும் தங்களுக்கேயுரிய கேவலமான உத்தியான வதந்தி பரப்பும் வேலையை, மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தொடங்கிவிட்டனர்.

இராமர் கோயில் திறக்கப்படும் நாளில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோயில்களில் சிறப்பு பூசைகள் செய்தவற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவதூறு நிறைந்த பொய்ச் செய்தியை ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகப் பரப்பினர். மாநாட்டு அரங்கில் இருந்தாலும், தன் துறையின் பணிகளை ஒவ்வொரு நொடியும் மேற்கொண்ட செயல்பாபு எனப்படும் அமைச்சர் சேகர்பாபு உடனடியாக இந்த அவதூறு பரப்புரைக்கு மறுப்பு தெரிவித்து, உண்மை நிலையை விளக்கி அறிக்கை வெளியிட்டார்.

ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எனப் பரவச் செய்து அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.க.வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் தலைநகரம் டெல்லி முதல் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோயிலில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொளி காட்சி ஒளிபரப்புக்கு அறநிலையத்துறை தடை விதித்திருப்பதாகவும் ஒன்றிய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் அம்மையார் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர். இதனை மறைத்துவிட்டு, ஒன்றிய நிதியமைச்சர் பரப்பிய உண்மைக்கு மாறான செய்தி.. அல்ல, அல்ல, திட்டமிடப்பட்ட வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது.

அதுமட்டுமல்ல, இந்தப் பொய்ப் பரப்புரைக்குச் சென்னை உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளதையும், தமிழ்நாட்டை என்றென்றும் அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்யும் மதநல்லிணக்க எண்ணம் கொண்ட மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். “பக்தி என்பது மகிழ்ச்சிக்கும் அமைதிக்கானதும் மட்டுமே. சமூகத்தில் நிலவும் சமநிலையைச் சீர்குலைப்பதற்காக அல்ல” என்றும், சிறப்பு பூஜைகளுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படாத நிலையில், தவறான பரப்புரையால் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு வழி வகுத்திடக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்துகொள்ளும் பா.ஜ.க.வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களும், பா.ஜ.க.வால் உயர்ந்த பொறுப்பைப் பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் ஆளுநராக நியமனப் பதவியில் உள்ள மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் கோயிலுக்கு வழிபாடு செய்யச் சென்றபோது, பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்களிடம் கண்ணுக்குப் புலப்படாத பயம் தெரிந்ததாகவும், அயோத்தி இராமர் கோயிலில் பால இராமர் சிலை நிறுவப்படும் நாளில், கோதண்டராமர் கோயில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார்.

காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில்தான் இருக்கிறார், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல் தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் உள்ள மதிப்பிற்குரிய ஆர்.என்.ரவி அவர்கள். அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில் அர்ச்சகர்களே, எவ்வித பயத்திற்கோ அடக்குமுறை உணர்வுக்கோ இடமில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்!

தமிழ்நாட்டில் எந்தக் கோயிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தலாம். தைப்பூச நாளில் முருகன் திருக்கோயில்களிலும், சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும்போதும், திருவாரூர் ஆழித்தேரோட்டத்தின்போதும், கும்பகோணம் மகாமகம் திருவிழாவிலும், மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில் அறுபத்து மூவர் திருவீதியுலாவிலும் ஆயிரமாயிரம் பக்தர்கள் உண்மையான பக்தியுடன் பங்கேற்பதையும், அவர்களுக்கு பிற மதத்தினரும் ஒத்துழைப்பு அளிப்பதையும் சமூகநீதிக் கொள்கை அடிப்படையிலான மதநல்லிணக்க நிலமாகிய தமிழ்நாட்டில் காணமுடியும். பா.ஜ.க. தன் தோளில் சுமக்கும் அயோத்தி இராமர் கோயில் அரசியலை, அமைதியான கோதண்டராமர் திருக்கோயிலில் போய் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?

தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமானையும் வழிபாடுவார்கள். பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். இந்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பா.ஜ.க.வில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படுகிறார்கள். அவர்களின் தலையில் குட்டு வைப்பதுபோல உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்போம்.

சேலத்தில் நடந்த திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் மகத்தான வெற்றி கண்டு அலறுகின்ற திமுகவின் அரசியல் எதிரிகளும், தமிழ்நாட்டின் நிரந்தர எதிரிகளும் வதந்திகளைப் பரப்பி திசைதிருப்ப நினைத்தாலும், திமுக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும், வில்லில் தொடுக்கப்பட்ட கணை தனது இலக்கை மட்டுமே குறி வைப்பதுபோல செயல்படவேண்டும். மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள், பல்வேறு தலைப்புகளில் நடந்த சொற்பொழிவுகளில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளை முன்னெடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மதவெறி பாசிச சக்திகளை முறியடிக்கும் பணியில் முனைப்பாகச் செயல்படுங்கள். நம் திராவிட மாடல் கொள்கையை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வோம். நாடாளுமன்றத் தேர்தலில் வெல்வோம்!"

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in