அயோத்தி நேரலைக்கான எல்இடி திரைகள் அகற்றம்: நிர்மலா சீதாராமன் கண்டனம்

"தமிழ்நாட்டிலுள்ள திமுக அரசு குடிமக்களின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டது."
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: twitter.com/nsitharamanoffc

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரலை செய்வதற்கான எல்இடி திரைகளைக் காவல் துறையினர் அகற்றியதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இதை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நேரலை செய்வதற்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தக் கோவிலில் இருந்து நிர்மலா சீதாராமன் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரலையைக் காண திட்டமிட்டிருந்தார்.

ஏற்கெனவே, கோவில்களில் சிறப்புப் பூஜைகள், அன்னதாம் செய்ய அறநிலையத் துறை தடைவிதித்ததாக நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் தமிழக அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேரலைக்கான தடை குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"தனியார் கட்டுப்பாட்டில் உள்ள புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் காலை 8 மணி முதல் பஜனைகள் நடைபெறவிருந்தன. சீருடையில் வராத காவல் துறையினரால் அங்கு அமைக்கப்பட்டிருந்த எல்இடி (LED) திரைகள் அகற்றப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலுள்ள திமுக அரசு குடிமக்களின் உரிமையைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. காவல் துறையுடன் சேர்ந்து மக்களின் நம்பிக்கையை நசுக்குவதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மீதான வெறுப்பை ஹிந்து விரோத திமுக வெளிப்படுத்துகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் அயோத்தி நேரலைக்காக 466 எல்இடி திரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 400-க்கும் மேற்பட்ட இடங்களில் காவல் துறையினர் எல்இடி திரைகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள் அல்லது படைகளைக் கொண்டு நேரலையைத் தடுத்திருக்கிறார்கள். எல்இடி திரைகளை விநியோகம் செய்பவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள். ஹிந்து விரோத திமுக, சிறு தொழிலைப் பாதிப்படையச் செய்கிறது. இதைத் தமிழில் “வயித்திலே அடிப்பது” என்று சொல்வார்கள்."

ஆனால், கோவில்களில் பஜனை மற்றும் மற்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி கோரியதாகவும், எந்தவொரு காணொளி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என அனுமதிக்கான கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் காஞ்சிபுரம் காவல் துறை தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in