பாஜக ஆட்சிக்கு வரும்போது அறநிலையத் துறை இருக்காது: அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை (கோப்புப்படம்)
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை (கோப்புப்படம்)ANI

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும்போது அறநிலையத் துறை என்கிற அமைப்பு இருக்காது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, குழந்தை ராமரினுடைய பிராண பிரதிஷ்டையை நாம் அனைவரும் பார்த்தோம். மிக முக்கியமான சரித்திரம் நம் நாட்டில் நிகழ்ந்துள்ளது. 500 ஆண்டுகள் நம் மக்கள் பொறுமையாக இருந்தார்கள். அனைத்து வழிகளிலும் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தார்கள். தர்மத்தின் வழியில் குழந்தை ராமருக்கு மறுபடியும் அவர் தங்கக்கூடிய இடத்தை அமைத்துத் தர வேண்டும் என்கிற ஏக்கம் எதிர்பார்ப்பை அயோத்தியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய எஜமானராக இருந்து நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

இந்த நிகழ்வைத் தமிழ்நாட்டில் நேரலை செய்வதற்குக் கூட நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எந்தளவுக்கு தமிழக அரசு இங்குள்ள மக்கள் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது, ஹிந்து மக்களுக்கு எதிரான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்பதை மறுபடியும் இந்த மூன்று நாள்கள் ஊர்ஜிதம் செய்திருக்கிறது.

இதையும் அறவழியில், ஆன்மிக வழியில், தர்மத்தின் வழியில் பாஜக வென்று காட்டுவோம் என்று இந்த நாளில் சபதம் ஏற்கிறோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் ஆளும் திமுக அரசுக்குப் பாடம் புகட்டுவார்கள் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது.

கோபாலபுரத்திலுள்ள கோயில் மிகவும் விசேஷமான கோயில். அங்குள்ள அறங்காவலர் எங்களுடன் அமர்ந்து நேரலையைக் காண வேண்டும் என்றார். அதற்காக இங்கு வந்தோம். கோபாலபுரம் என்ற வார்த்தைக்காக இந்த அரசியல் அல்ல. நிறைய இடத்தில் அழைப்பு விடுத்திருந்தாலும்கூட, இங்குள்ள அறங்காவலர் அழைத்ததன் காரணமாக இங்கு வந்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை எதிலும் அரசியல் கிடையாது. இதை இவ்வளவு பெரிய பிரச்னையாக்க வேண்டியதில்லை. கேட்ட அனுமதியைக் கொடுத்திருந்தால், எதற்காக சட்டப்போராட்டம் நடத்தியிருக்கப்போகிறோம்.

இந்து அறநிலையத் துறையே வேண்டாம் என்கிறோம். இது வேண்டாம் என்பதற்கான மற்றொரு காரணம் இன்று அரங்கேறியுள்ளது. கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வேண்டும் என்கிறார்கள். குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டைக்கு அனுமதி வேண்டும் என்கிறார்கள். திரைபோட அனுமதி வேண்டும் என்கிறார்கள். எழுத்துபூர்வமாகக் கொடுங்கள் என்றால், வாய்மொழியாகவே அனுமதி இல்லை என்போம் என்கிறார்கள்.

இந்து அறநிலையத் துறை தேவையில்லாத அமைப்பு என இதற்காகத் தான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் தெளிவாக உள்ளோம். 2026-ல் பாஜக மக்கள் அன்போடு ஆட்சிக்கு வரும்போது இந்து அறநிலையத் துறை இருக்காது" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in