ராமர் கோயில் நிகழ்ச்சிகள் நேரலைக்குத் தடையா?: நிர்மலா சீதாராமன் ஆவேசம்

"ஹிந்து விரோத வெறுப்புணர்வு செயலுக்குக் கடுமையான கண்டனங்கள்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரலை செய்வதற்கும், பூஜைகள், பஜனைகள் நடத்துவதற்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் ராமர் கோயில் நிகழ்ச்சிகளை நேரலை செய்ய தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் ராமருக்கு 200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. அறநிலையத் துறை நிர்வகிக்கும் கோயில்களில் ராமர் பெயரில் எந்தவொரு பூஜை, பஜனை, பிரசாதம், அன்னதானமும் நடத்த அனுமதியில்லை. தனியார் கோயில்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளையும் காவல் துறையினர் தடுத்து நிறுத்துகிறார்கள். பந்தல்களை அகற்றிடுவோம் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அச்சுறுத்துகிறார்கள். இந்த ஹிந்து விரோத வெறுப்புணர்வு செயலுக்குக் கடுமையான கண்டனங்கள்.

பஜனைகள் நடத்தும், ஏழைகளுக்கு உணவு கொடுக்கும், இனிப்புகள் வழங்கி கொண்டாடும் மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதைப் பார்ப்பதற்குக் கூட அச்சுறுத்தப்படுகிறார்கள். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நேரலை செய்யப்படும்போது மின்சாரம் துண்டிக்கப்படலாம் என கேபிள் டிவி ஊழியர்கள் தெரிவித்து வருகிறார்கள். இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவின் ஹிந்து விரோத நடவடிக்கைகள் இவை.

ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரலை செய்வதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து வருகிறது. இது வெறும் பொய்யும், போலியுமானது. அயோத்தி குறித்த தீர்ப்பு வந்தபோது எந்தவொரு சட்டம் ஒழுங்கு பிரச்னையும் நிகழவில்லை. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியபோதுகூட, நாட்டில் எந்தவொரு பகுதியிலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழவில்லை. தமிழ்நாட்டில் ராமரைத் தாமாக முன்வந்து மக்கள் கொண்டாடுவது ஹிந்து விரோத திமுகவுக்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது."

உத்தரப் பிரதேசம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை (திங்கள்கிழமை) மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in