மோடியைப் பிரதமராக்க தமிழக மக்கள் இருமுறையும் வாக்களிக்கவில்லை: மு.க. ஸ்டாலின்

"இண்டியா கூட்டணியை வெல்ல வைப்பதும், இந்தியாவை வெல்வதும் தான் நமது ஒற்றை நோக்கம்"
மோடியைப் பிரதமராக்க தமிழக மக்கள் இருமுறையும் வாக்களிக்கவில்லை: மு.க. ஸ்டாலின்

நரேந்திர மோடியைப் பிரதமராக்க தமிழக மக்கள் இருமுறையும் அவருக்கு வாக்களிக்கவில்லை என திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் காலை தொடங்கியது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக் கொடியை ஏற்றி மாநாட்டைத் தொடக்கி வைத்தார். மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற தலைப்பில் இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது.

இந்த இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்களை இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிந்தார். இதில் நிறைவேற்றப்பட்ட 23-வது தீர்மானமாக, இந்துக்களின் உண்மையான எதிரி பாஜகதான் என்பதை அம்பலப்படுத்துவோம் என்பது இடம்பெற்றிருந்தது.

இந்த மாநாட்டில் அனைவரும் உரையாற்றிய பிறகு இறுதியாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

"உங்களை சேலத்தில் ஒருசேர பார்க்கும்போது தெற்கில் ஒரு விடியல் பிறந்ததைதைப்போல விரைவில் இந்திய நாடு முழுவதும் விடியல் பிறக்கும் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது. எந்தக் கொம்பனாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்கிற நம்பிக்கை ஊட்டுகிற மாநாடாக சேலம் மாநாடு அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் நலம், வளத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது. இதை உணர்ந்து தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் இளைஞரணி மாநாட்டை மாநில உரிமை மாநாடு எனப் பெயர் சூட்டியுள்ளோம். அமையவிருக்கிற இண்டியா கூட்டணி ஆட்சியானது, மாநில உரிமைகளை வழங்குகிற சிறப்பான அரசியலமைப்பை உருவாக்குகிற முயற்சிகளில் கவனம் செலுத்தும்.

மிகப் பெரிய இயற்கை பேரிடர்கள் காலங்களில்கூட நமக்கு உதவுவதில்லை. பேரிடருக்காக ரூ. 37 ஆயிரம் கோடி கேட்டுள்ளோம். இதுவரை ஒரு பைசா வரவில்லை. பிரதமர் வந்தார், தருவேன் என்றார். நிதியமைச்சர் வந்தார், தருவேன் என்றார். பாதுகாப்புத் துறை அமைச்சர் வந்தார், தருவேன் என்றார். டி.ஆர். பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள் தலைமையிலான குழு உள்துறை அமைச்சரைச் சந்தித்தார்கள். அவரும் தருவேன் என்றார். இதுவரை ஒன்றும் வரவில்லை.

திருக்குறளைச் சொல்லி, பொங்கலைக் கொண்டாடி, அயோத்தியில் கோவிலைக் கட்டினால்போதும், தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என நினைக்கிறார்கள். அவர்கள் இன்னும் நம்மைப் புரிந்துகொள்ளவில்லை. இது பெரியார் மண், பேரறிஞர் அண்ணாவின் மண், கலைஞரின் மண்.

நரேந்திர மோடி இருமுறை பிரதமராகியிருக்கிறார். இருமுறையும் தமிழக மக்கள் அவரைப் பிரதமராக்க வாக்களிக்கவில்லை. இந்த முறையும் நிச்சயம் வாக்களிக்கப்போவதில்லை. தமிழ்நாட்டைப்போலவே இந்தியாவும் இந்த முறை செயல்படப்போகிறது.

நாற்பதும் நமதே, நாடும் நமதே என நாளை முதல் புறப்படுங்கள். வரும் மூன்று மாதங்களில் உங்களுடைய உழைப்பில்தான் இந்தியாவின் அடுத்த 5 ஆண்டுகால எதிர்காலம் உள்ளது. உங்களது உழைப்பை முழுமையாக வழங்குங்கள். நமது ஒற்றை நோக்கம் இண்டியா கூட்டணியை வெல்ல வைப்பது, இந்தியாவை வெல்வது. இதுதான் சேலம் மண்ணிலிருந்து இந்த நாட்டுக்கு நாம் சொல்லும் செய்தி.

சேலத்தில் சூளுரைப்போம், சேர்ந்து எழுவோம், இண்டியா கூட்டணி வெல்லட்டும் அதனைக் காலம் சொல்லட்டும். நாடும் நமதே, நாற்பதும் நமதே!" என்றார் அவர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in