இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக: திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம்

மாநாட்டில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானங்களை முன்மொழிந்த இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானங்களை முன்மொழிந்த இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்படம்: https://twitter.com/Udhaystalin

இந்துக்களின் உண்மையான எதிரி பாஜக என்பதை அம்பலப்படுத்துவோம் என திமுக இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் காலை தொடங்கியது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கட்சிக் கொடியை ஏற்றி மாநாட்டைத் தொடக்கி வைத்தார். மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற தலைப்பில் இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது.

இந்த இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்களை இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிந்தார். இதில் நிறைவேற்றப்பட்ட 23-வது தீர்மானமாக, இந்துக்களின் உண்மையான எதிரி பாஜகதான் என்பதை அம்பலப்படுத்துவோம் என்பது இடம்பெற்றிருந்தது.

இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது:

"10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சமையல் சிலிண்டர் விலை, பெட்ரோல்-டீசல் விலை ஆகியவற்றைக் கடுமையாக உயர்த்தி, மக்களை வாட்டி வதைப்பதும், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வதாரத்தைப் பாதிக்கச் செய்ததுமே வேதனை மிகுந்த சாதனைகளாக இருக்கின்றன.

ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காகும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், ஏழை-எளிய மக்களை நடுஇரவில் நடுரோட்டில் நிறுத்திய ஒன்றிய பா.ஜக. அரசு, கறுப்புப் பணத்தையும் ஒழிக்கவில்லை, கறுப்புப் பணத்தை ஒழித்து, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாய் போடுவதாகக்கூறி, சல்லிப் பைசாவையும் போடவில்லை.

தனது வாக்குறுதிகள் அனைத்திலும் தோல்வியடைந்த பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, மக்களுக்குச் செய்த துரோகங்களை மறைக்க, மதவாத அரசியலை முன்னெடுத்து, அயோத்தி இராமர் கோவிலை வைத்து வாக்குகள் பெற்றுவிடலாம் என நினைப்பது ஆன்மிகவாதிகளையும் ஏமாற்றும் செயலாகும்.

நாட்டில் உள்ள இந்துக்களில் பெரும்பான்மையான மக்களை 10 ஆண்டுகாலமாக ஏமாற்றிவிட்டு, இராமர் கோவிலைக் காட்டி, இந்துக்கள் ஓட்டுகளை வாங்கிவிடலாம் என அரசியல் கணக்குடன், கடவுளையும் ஏமாற்ற நினைக்கும் இந்து மக்களின் உண்மையான எதிரியான பா.ஜ.க.வின் மதவாத அரசியலை வீடு வீடாக அம்பலப்படுத்தும் பரப்புரையை இளைஞர் அணி மேற்கொள்ளும் என இந்த மாநாடு தீர்மானிக்கிறது."

உத்தரப் பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு மத்திய பாஜக அரசு வெகு விமரிசையாக ஏற்பாடுகளைச் செய்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த கும்பாபிஷேக விழாவுக்காக விரதங்கள் இருந்து வருவதாகச் செய்திகள் வரும் வேளையில் திமுக இளைஞர் அணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in