தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதில் டாப் 5 பட்டியலில் தமிழ்நாடு!

2021 வரை தர வரிசைப் பட்டியலில் பின்னுக்கு இருந்த தமிழகம், தற்போது 4 மாநிலங்களுடன் போட்டியிடும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது
தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதில் டாப் 5 பட்டியலில் தமிழ்நாடு!
ANI

தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்ட 2022-ம் ஆண்டுக்கான ஸ்டார்ட் அப் டாப் 5 தர வரிசைப் பட்டியலில் தமிழ்நாடு இடம் பிடித்திருக்கிறது. தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதிலும் புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகப் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறது நம் மாநிலம்.

தொழில் முனைவோர்கள் அதிகமுள்ள மாநிலங்களினால் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த முடியும் என்பதால் இதுவொரு முக்கியமான சாதனையாக கருதப்படுகிறது. டாப் 5 பட்டியலில் குஜராத், கர்நாடகா, கேரளா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்டவை முறையே முதல் நான்கு இடங்களை பிடித்திருக்கின்றன.

இளம் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவது, அவர்களுக்கான புதிய கட்டமைப்புகளை உருவாக்குவது உள்ளிட்ட விஷயங்களில் இவை அனைத்தும் நீண்டகாலமாகவே முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகின்றன. 2021 வரை தர வரிசைப் பட்டியலில் பின்னுக்கு இருந்த தமிழகம், தற்போது 4 மாநிலங்களுடன் போட்டியிடும் அளவுக்கு முன்னேறியிருக்கிறது.

மாநிலங்களின் ஸ்டார்ட்அப் தரவரிசைக் கட்டமைப்பு (SRF) என்பது உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்கிறது. இதன்படி ஒவ்வொரு மாநிலத்தின் கட்டமைப்புகளை ஆய்வு செய்து, கடந்த 5 ஆண்டுகளாக ஸ்டார்ட்அப் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. தர வரிசை சம்பந்தப்பட்ட கள ஆய்வு நான்காவது முறையாக நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 28 மாநிலங்களில் உள்ள 356 மாவட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (ஸ்டார்ட்அப்டிஎன்) செயல்பாடுகளைப் பொறுத்தவரை மூன்று விஷயங்களில் 100 சதவீத மதிப்பெண்களையும் பெற்றிருக்கிறது. குறிப்பாக நிதி ஆதரவு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றில் கடந்த ஆண்டுகளை விட தமிழ்நாடு கூடுதல் மதிப்பெண்களை பெற்றிருக்கிறது.

இன்குபேஷன் மற்றும் மென்டர்ஷிப் ஆதரவில் தமிழ்நாடு 94% மதிப்பெண்களையும், புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்துவதில் 79% மதிப்பெண்களையும் பெற்றிருக்கிறது. StartupTN முன்னெடுப்புகளான TANSEED நிதி, தமிழ்நாடு SC/ST ஸ்டார்ட்அப் ஃபண்ட் மற்றும் ஸ்டார்ட்-அப்களை ஊக்கப்படுத்துவதற்கான புதுமை வவுச்சர் திட்டம் போன்றவை தமிழகத்திற்குப் பெரிய அளவில் கைகொடுத்திருக்கின்றன.

பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட் அப்களுக்கான சிறப்பு விருதும், கிராமப்புற மேம்பாடு மற்றும் பசுமைத் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவதற்காகப் பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் 7,000-க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட ஸ்டார்ட் அப்கள் இருப்பதாகவும் இதில் 2,250-க்கும் மேற்பட்டவை SRF 2022-ன் கீழ் கள ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களைப் போல் அல்லாமல், சென்னைக்கு வெளியேயும் ஸ்டார்ட் அப் வளர்ச்சி குறித்து திட்டமிட்டதும் டாப் 5 பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற உதவியிருப்பதாகப் பொருளாதார விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in