ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும்: திமுக கடிதம்

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும்: திமுக கடிதம்
படம்: திமுக ஐடி விங்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கைவிட வேண்டும் என நாடாளுமன்றம் அமைத்த உயர்நிலைக் குழுவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.

இதுதொடர்பாக திமுக எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"ஏற்கெனவே 23.12.2023 அன்று சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் நடத்துவது குறித்த திமுகவின் கருத்துகளைக் கோரியது. இதற்கு திமுக தன்னுடைய 12.1.2023 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக "ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு" எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகு நேரடி விசாரணைக்கு எவ்விதத் தகவலும் திமுகவுக்கு அனுப்பப்படவும் இல்லை. அந்த சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு தொடர் நடவடிக்கையும் என்னவென்று தெரியவில்லை.

இதில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சம் என்னவென்றால், 2022ல் சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் நடத்துவது சம்பந்தமாகத்தான் ஆலோசனைகளைக் கோரியது. ஆனால், தற்பொழுது ஒன்றிய அரசு இதை விரிவுபடுத்தி நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவைகளோடு, நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஆய்வு வரம்புகளை வெளியிட்டுள்ளது. இந்தச் செயல் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், குடியரசு தலைவர் முறையிலான ஆட்சியை நோக்கியும் செல்வதாகும்.

ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட உயர்நிலைக் குழு துவக்கத்திலிருந்தே சட்டவிரோதமானதும் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும் ஆகும்.

மேற்குறிப்பிட்ட உயர்நிலைக் குழுவானது, அரசியலமைப்புப் பிரிவு 73 ன் கீழ் ஒன்றிய அரசுக்கு அளிக்கப்பட்ட நிர்வாக அதிகாரத்தின் மூலம் அமைக்கப்பட்டதாகும். ஒன்றிய அரசின் நிர்வாக அதிகாரம் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உயர்வானது அல்ல. சட்டமியற்றும் அதிகாரம் உள்ளவற்றில் மட்டும்தான் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும் என்று வகுத்துல்ல அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாகும் என்பதால் இந்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதே செல்லாத ஒன்றாகும். மாநில அரசின் பட்டியலில் உள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் தேர்தல் நடைமுறை பற்றி விசாரிக்க ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்த உயர்நிலைக்குழுவிற்கு அதிகாரமில்லை என்பது திமுக திட்டவட்டமான கருத்தாகும். அது மட்டுமின்றி இந்த உயர்நிலைக் குழு சட்டவிரோதமானது. அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்பதை திமுக ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறது.

உயர்நிலைக் குழு இது தொடர்பான தனது விசாரணையை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இல்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகம் சட்டத்தின் வழி கொண்டு பொருத்தமான நடவடிக்கையை எடுக்க தள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in