கும்பாபிஷேகத்தில் மன்னர்கள் கலந்துகொள்வது தமிழ்ப் பாரம்பரியம் - டி.ஆர். பாலுவுக்கு தமிழிசை பதிலடி

அயோத்தியில் ராமர் கோயில் என்பது நீண்ட கால கனவு. திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தும் ஏனோ ஏற்றுக்கொள்ளவில்லை என்று வருத்தம்
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா குறித்து திமுக எம்.பி டி.ஆர். பாலு விடுத்துள்ள அறிக்கை குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

திறப்பு விழா அழைப்பிதழை திமுகவினர் நிராகரித்திருப்பதோடு, ஆன்மிக விழாவுக்கு அரசியல் முலாம் பூசுவதையும் கடுமையாக கண்டித்திருக்கிறார்.

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா குறித்து அறிக்கை வெளியிட்ட திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, திறப்பு விழாவில் திமுக பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். கோயில் திறப்பு விழா ஆன்மிக விழா இல்லை என்றும், அதுவொரு அரசியல் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இறை நம்பிக்கை என்பது ஒருவரது ஆன்மத் தேடலுடன் சம்பந்தப்பட்டது. அது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால், அரசியல் அணி திரட்டவும், வாக்கு வங்கிக்காகவும் பக்தியை மூலதனமாக வைத்து, மக்களின் நம்பிக்கையில் அரசியல் செய்வது இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிரானது என்று குறிப்பிட்டவர், கோயில் கட்டுவதைக் கட்சியின் சாதனையாக பாஜக காட்டி வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், யார் கோயில் திறப்பு விழாவை அரசியலாக்குகிறார்கள்? யாரெல்லாம் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்கள்? யாரெல்லாம் கலந்து கொள்ளவில்லை? ஏன் அவர்கள் கலந்து கொள்ளவில்லை? என்பதையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் என்பது ஒவ்வொருவரின் நீண்ட கால கனவு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் ஏனோ ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.

தமிழகத்தில் ஏராளமான கோயில்கள் நம்முடைய சிற்பிகள், ஸ்தபதிகளால் கட்டப்பட்டாலும், கும்பாபிஷேகம் செய்வதன் மூலம் நம்முடைய மன்னர்களும் பேரரசர்களும் அதையொரு திருவிழாவாகக் கொண்டாடினார்கள். கும்பாபிஷேகம் என்னும் பாரம்பரியத்தை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியது நம்மவர்கள். தமிழ் கலாசாரத்தின் படி மன்னர்களே முன்னின்று கும்பாபிஷேகத்தை நடத்தியிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது பிரதமர் மோடி, கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதை ஏன் அரசியலாக்கவேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவினருக்கு பாஜகவினர் பதிலடி தருவதுதான் வழக்கம். இன்னொரு மாநிலத்தின் ஆளுநரே அரசியல் கருத்து சொல்வதெல்லாம் சாதாரணமாகவிட்டது என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in