Breaking News

அரசுப் பள்ளிக்கு நிலம் கொடுத்த ஆயி பூரணம் அம்மாள்: முதல்வரின் சிறப்பு விருது அறிவிப்பு

அரசு உயர்நிலைப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான சொந்த நிலத்தை ஆயி பூரணம் அம்மாள் கொடையாக வழங்கினார்
ஆயி பூரணம் அம்மாள்
ஆயி பூரணம் அம்மாள்படம்: https://twitter.com/mkstalin
1 min read

அரசுப் பள்ளிக்கு ரூ. 7 கோடி மதிப்பிலான நிலத்தைக் கொடையாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாளுக்கு குடியரசு நாளில் சிறப்பு விருது வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மதுரை ஒத்தக்கடை அருகே கொடிக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்ட ரூ. 7 கோடி மதிப்பிலான சொந்த நிலத்தை ஆயி பூரணம் அம்மாள் கொடையாக வழங்கினார். அவர் கல்வித் துறைக்கு எழுதி கொடுத்துள்ள நிலத்துக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தொகையே ரூ. 4.50 கோடி. இதை யாரிடமும் எதையும் தெரிவிக்காமல் பள்ளிக்காகக் கொடுத்துள்ளார். பள்ளி வளாகத்துக்கு தனது மகள் ஜனனியின் பெயரை வைக்குமாறு மட்டும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இவரது கொடையுணர்வைப் பாராட்டுவதற்காக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன், ஆயி பூரணம் அம்மாள் பணிபுரியும் வங்கிக்கு நேரடியாகச் சென்று பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்த நிலையில், குடியரசு நாளில் ஆயி பூரணம் அம்மாளுக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:

"கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள்.

ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in