தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்: பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்: பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும் என பள்ளிக் கல்வித் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பகல் கனவு காண்பதுபோல தமிழ்நாட்டில் ஒருபோதும் மும்மொழிக் கொள்கை உருவாக வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை ஊட்டுவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது தமிழ்நாடு அரசு. அதன்படி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற்காக மைக்ரோசாஃப்ட் டீல்ஸ் (TEALS) திட்டம் என்னும் ஒரு திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாகக் கொண்டு வந்திருக்கிறது.

இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவ அண்ணாமலை கூறுகையில் இது தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் என்று தெரிவித்திருந்தார். மேலும் வெகு விரைவில் முன்மொழிக் கொள்கையையும் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ திரிக்கவோ முயலக்கூடாது. தமிழ்நாடு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் அதில் மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்துவிட்டது. எடுத்துக்காட்டாக தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 % ஆக ஆக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. ஆனால் அகில இந்திய மேல்நிலைக் கல்வி ஆய்வறிக்கையின் படி (All India Survey of Higher Education (AISHE) தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதிவிகிதத்தை 2019-20 கல்வியாண்டிலேயே எட்டிவிட்டது.

2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவிகிதத்தை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது தேசிய கல்விக் கொள்கை. ஆனால் தமிழ்நாடு 100 சதவீதத்தையே 2035ல் எட்டிவிடும். தமிழ்நாடு அரசு செய்ததை, செய்துகொண்டிருப்பதை தேசிய கல்விக் கொள்கையில் இணைத்துவிட்டு தேசிய கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்புக்குரியது.

குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை . நாட்டின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு எப்பொழுதும் தொழில்நுட்பத் துறையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர்.

முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்றவற்றில் வருங்காலத்தில் மிகத் தீவிரமாக பயிற்சிகள் அளிக்கப்படும். ஏனெனில் செயற்கை நுண்ணறிவை கையிலெடுக்கும் மாநிலமே இன்னும் பத்தாண்டுகளில் முன்னணி மாநிலமாக இருக்கப்போகிறது.

பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். அண்ணாமலை பகல் கனவு காண்பதுபோல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக்க வாய்ப்பு இல்லை. இருமொழிக் கொள்கையே தொடரும்."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in