யாரும் வராததால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி: தப்பிய நெல்லை மேயர்!

நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்றுப்போனாலும் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்களைச் சமாளிக்க முடியாமல் திணறும் திமுக
நெல்லை மேயர் சரவணன்
நெல்லை மேயர் சரவணன்twitter.com/PMSARAVANANDMK

திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் சரவணனுக்கு எதிராக அவர் சார்ந்த கட்சியான திமுகவைச் சேர்ந்த 38 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த நிலையில் வாக்கெடுப்புக்கு யாரும் ஆஜராகாததால் அவரது மேயர் பதவி தப்பியிருக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் எழுதிய கடிதத்தில், மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்திருந்தார்கள். இதையடுத்து இன்று வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில் கடைசி நேரச் சமாதான முயற்சிகளின் காரணமாக சரவணனின் மேயர் பதவி காப்பாற்றப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

2022-ம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளில் திமுக கூட்டணி 50 இடங்களில் வெற்றி பெற்றது. மேயர் பதவி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டதில் ஏகப்பட்ட போட்டி நிலவியது. யாரும் எதிர்பாராத விதமாக திருநெல்வேலி திமுக மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப்பின் ஆதரவாளரான பி.எம். சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். போட்டியின்றி மேயராகத் தேர்வானார்.

மாவட்டச் செயலாளருக்கு நெருக்கமானவர் என்கிற காரணத்தால் பலரைப் பின்னுக்குத் தள்ளி, சரவணனுக்கு முதலிடம் கிடைத்தது. மேயர் பதவியை சரவணன் ஏற்றுக்கொண்டதும் நிலைமை தலைகீழானது. மேயருக்கும் மாவட்டச் செயலாளருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அப்துல் வஹாப்பின் ஆதரவாளர்களாக இருந்த கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்கள். ஆனாலும், அரசியல் சூழல் மேயருக்கு சாதகமாகவே இருந்தது.

மேயருடனான மோதல் நீடித்த நேரத்தில் கட்சித் தலைமையின் கோபத்தையும் எதிர்கொண்டதால் மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப்பின் பதவி பறிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சரான டி.பி.எம். மைதீன்கான் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், திருநெல்வேலி திமுகவின் கோஷ்டி பூசல்களைக் கட்சித் தலைமையால் சரி செய்ய முடியாத நிலை தொடர்ந்து இருந்து வந்தது.

சென்ற ஆண்டு அதிருப்தி கவுன்சிலர்கள் திருச்சிக்கு புறப்பட்டு வந்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து மேயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமைச்சரும், கூடிய விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனாலும் பிரச்னை தொடர்ந்து, முதல்வரின் கவனத்திற்கும் சென்றது.

கட்சி நிர்வாகிகள் மேயர் சரவணன் மீது தொடர்ந்து புகார் அளித்து வந்தும் கட்சித் தலைமை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள். இந்நிலையில்தான் பொறுமை இழந்த திமுக கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள்.

தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று ஓட்டெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் மாநகராட்சி கூட்டத்திற்கு யாரும் வருகை தரவில்லை. திமுக மட்டுமல்லாது அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும் வராததுதான் பலரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. தீர்மானம் தோற்றுப்போனாலும் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்களைச் சமாளிக்க முடியாமல் திமுக திணறுவது வெளிப்படையாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in