லஞ்சப் புகாரில் எம்எல்ஏ, எம்பி-க்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடையாது: உச்ச நீதிமன்றம்

நரசிம்ம ராவ் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பானது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 105 மற்றும் 194-க்கு முரணாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருத்து.
லஞ்சப் புகாரில் எம்எல்ஏ, எம்பி-க்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடையாது: உச்ச நீதிமன்றம்

லஞ்சம் பெற்ற புகாரில் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப் பாதுகாப்பைக் கோர முடியாது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஒருமித்த கருத்தாக இதைத் தெரிவித்துள்ளது.

1993 ஜூலையில் நரசிம்ம ராவ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுதொடர்புடைய வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 265 வாக்குகளும், அரசுக்கு எதிராக 251 வாக்குகளும் கிடைத்தன.

ஓராண்டுக்குப் பிறகு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர்கள் நரசிம்ம ராவ் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது. 1998-ல் இதுதொடர்புடைய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, நாடாளுமன்றம்/சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கும், உரையாற்றுவதற்கும் சட்டப் பாதுகாப்பானது பொருந்தும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்புடன் முரண்படுவதாக உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறுகையில், "அவையில் குறிப்பிட்ட முறையில் பேசுவதற்கும், வாக்களிப்பதற்கும் லஞ்சம் பெற்றதாக எழும் குற்றச்சாட்டுகளில் உறுப்பினர்களுக்கு சட்டப் பாதுகாப்பை நீட்டித்த பிவி நரசிம்ம ராவ் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுடன் நாங்கள் முரண்படுகிறோம்" என்றார்.

நரசிம்ம ராவ் வழக்கில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பானது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 105 மற்றும் 194-க்கு முரணாக இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் லஞ்சம் பெறுவது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீர்குலைக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், விளைவுகள் குறித்து சிந்திக்காமல் தங்களது பணியைச் சுதந்திரமாக செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்வதே அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 105 மற்றும் 194-ன் நோக்கம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in