சண்டிகரில் மூத்த துணை மேயர் பதவியைக் கைப்பற்றிய பாஜக

பாஜகவுக்கு 19 வாக்குகளும், இண்டியா கூட்டணிக்கு...
சண்டிகரில் மூத்த துணை மேயர் பதவியைக் கைப்பற்றிய பாஜக

சண்டிகர் மூத்த துணை மேயர் பதவிக்கு பாஜகவின் குல்ஜீத் சிங் சந்து, 19 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சண்டிகர் துணை மேயர் மற்றும் மூத்த துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பாஜகவுக்கு 19 வாக்குகளும், இண்டியா கூட்டணிணிக்கு (காங்கிரஸ் + ஆம் ஆத்மி) 16 வாக்குகளும் கிடைத்தன. ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் நகராட்சியில், பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 14 இடங்கள் இருந்தன. ஆனால், பிப்ரவரி 19 அன்று மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தபோது அவர்களின் பலம் கூடியது. தில்லியில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பூனம் தேவி, நேஹா முசாவத் மற்றும் குர்சரண் கலா ஆகிய மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர். அகாலி தளம் கட்சியின் ஒரே கவுன்சிலரின் ஆதரவும் பாஜகவுக்கு உள்ளது.

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் 12 வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும், பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 வாக்குகளைப் பெற்றதாகவும், 8 வாக்குகள் செல்லாத வாக்குகள் என்றும் கடந்த 30-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இதையடுத்து குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றத்தில் செல்லாத வாக்குகள் என அறிவித்த 8 வாக்குச் சீட்டுகள் சிதைக்கப்பட்டிருந்ததாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதையடுத்து, நீதிமன்றம் அதை நேரடியாக ஆய்வு செய்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதுபோல அந்த 8 வாக்குச் சீட்டுகள் சிதைக்கப்படவில்லை என்றும், அவை அனைத்திலும் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாருக்கு ஆதரவாகவே வாக்குகள் இருந்தன என்றும் உச்ச நீதிமன்றம் கண்டறிந்தது. இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் செல்லாத வாக்குகள் என அறிவித்த 8 வாக்குகளையும் கணக்கில் சேர்த்து ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் மொத்தம் 20 வாக்குகளைப் பெற்றதையடுத்து, அவர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in