புதுச்சேரி பாஜகவுக்கு ஒதுக்கீடு: ரங்கசாமி

"பாஜக விரைவில் வேட்பாளரை அறிவிக்கும்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக புதுவை முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் நிறுவனத் தலைவருமான ரங்கசாமி அறிவித்துள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தோல்வியடைந்தது. காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். தற்போது என்.ஆர். காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவும் புதுச்சேரியில் போட்டியிட விருப்பம் காட்டியது.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், "மக்களவைத் தேர்தலை நாம் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும். நமது கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அது நமது கடமை. அதேவளையில், தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுக்க 5 பேர் கொண்ட உயர்நிலைக் கூட்டம் அமைக்கப்படும்" என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசினார். இதன்மூலம், புதுச்சேரியிலுள்ள ஒரேயொரு மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்படுவது உறுதியானது.

இதனிடையே, மக்களவைத் தேர்தலுக்கான 195 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

இதுதொடர்பாக, புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமியிடம் கேட்கப்பட்டது.

அவர் கூறுகையில், "இந்தத் தேர்தலில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. வேட்பாளரை அவர்கள் அறிவிப்பார்கள்" என்றார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற வைத்திலிங்கம் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் தென் மாநிலங்களில் போட்டியிடலாம் எனப் பேச்சுகள் வருகின்றன. கடந்த முறை ராகுல் காந்தி போட்டியிட்ட கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக ராகுல் காந்தி வேறு தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ராகுல் காந்தி புதுச்சேரியிலிருந்து போட்டியிடலாம் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in