வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குஜராத் மாநிலம் காந்தி நகரில் மீண்டும் போட்டி.
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்)ANI

மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக இன்று மாலை வெளியிட்டது. பாஜக பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, 195 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அவர் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் 34 மத்திய அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்கள், மக்களவைத் தலைவர் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசி தொகுதியிலிருந்து மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த இரு மக்களவைத் தேர்தல்களிலும் அவர் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

குஜராத்தில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காந்தி நகர் தொகுதியிலிருந்தும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா போர்பந்தரிலிருந்தும் போட்டியிடுகிறார்கள்.

மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னௌவிலும், ஸ்மிருதி இரானி அமேதியிலும் போட்டியிடுகிறார்கள்.

மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அருணாச்சல் மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிஷ்ணு படா ரே அந்தமான் நிகோபரிலிருந்து போட்டியிடுகிறார். அருணாச்சல் கிழக்கிலிருந்து தபிர் காவ் போட்டியிடுகிறார்.

மத்திய அமைச்சர் சர்வானந்தா சோனோவால் திப்ருகார் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.

மத்தியப் பிரதேசத்தில் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் விதிஷா தொகுதியிலிருந்தும், ஜோதிராதித்ய சிந்தியா குணா தொகுதியிலிருந்தும் போட்டியிடுகிறார்கள். பாஜக தலைவர் அலோக் சர்மா போபாலிலிருந்து போட்டியிடுகிறார்.

மத்திய அமைச்சர்கள் வி. முரளிதரன் அடிங்கல் தொகுதியிலும், ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்திலிருந்தும் போட்டியிடுகிறார்கள்.

தில்லியில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். தில்லி வடகிழக்கில் மனோஜ் திவாரி, புதுதில்லியில் பன்சுரி ஸ்வராஜ், தில்லி மேற்கில் கமல்ஜீத் ஷெராவத், தில்லி தெற்கில் ராம்வீர் சிங் பிதுரி, தில்லி சாந்தினி சௌக்கில் பிரவீன் காண்டேல்வால் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in