அம்பானி வீட்டு திருமணம்: ஜாம்நகர் விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து

ஜாம்நகர் விமான நிலையத்தில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை சர்வதேச விமானங்கள் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அம்பானி வீட்டு திருமணம்: ஜாம்நகர் விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து
படம்: https://twitter.com/aaijamairport

அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண நிகழ்ச்சிக்கு விருந்தினர்கள் வந்து செல்வதற்கு வசதியாக ஜாம்நகர் விமான நிலையத்துக்கு 10 நாள்களுக்குத் தற்காலிகமாக சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3 நாள்களுக்குப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பில் கேட்ஸ், மார்க் ஸக்கர்பெர்க், ரிஹானா, இவாங்கா டிரம்ப் என இந்தியா மட்டுமின்றி உலகளவில் புகழ்பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

இவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு வசதியாக ஜாம்நகர் விமான நிலையத்தில் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை சர்வதேச விமானங்கள் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலைய அந்தஸ்தை வழங்கியது மட்டுமில்லாமல் பயணிகளுக்கான விமான நிலையக் கட்டடம் 475 சதுர கிலோ மீட்டரிலிருந்து, 900 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்பு, விமானப் போக்குவரத்து அதிகம் தென்படும் நேரத்தில் 180 பயணிகளை உள்ளடக்கும் இந்தக் கட்டடமானது தற்போது 360 பயணிகள் வரை உள்ளடக்கும் என்று தெரிகிறது.

ஜாம்நகர் விமான நிலையம், பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இருக்கும் இந்திய விமானப் படையின் விமான நிலையம். இங்கு ஏற்கெனவே பயணிகள் விமானப் போக்குவரத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in