மங்களூர், பெங்களூரு குண்டுவெடிப்புகளுக்கு இடையே தொடர்பு இல்லை: சித்தராமையா

"இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யக் கூடாது."
கர்நாடக முதல்வர் சித்தராமையா (கோப்புப்படம்)
கர்நாடக முதல்வர் சித்தராமையா (கோப்புப்படம்)ANI

மங்களூர், பெங்களூரு குண்டுவெடிப்புகளுக்கு இடையே தொடர்பு கிடையாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தார்கள். காயமடைந்தவர்களில் 3 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த குண்டுவெடிப்பு கர்நாடகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக காவல் துறை உயர் அலுவலர்களுடன் முதல்வர் சித்தராமையா இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் சித்தராமையா, இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யக் கூடாது என்றார்.

அவர் கூறியதாவது:

"முகக் கவசமும், தொப்பியும் அணிந்து பேருந்தில் வந்த நபர்தான் வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். துணை முதல்வரும், உள்துறை அமைச்சரும் சம்பவ இடத்துக்குச் சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார்கள். நானும் இன்று மருத்துவமனைக்கும், சம்பவ இடத்துக்கும் செல்கிறேன்.

இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் ஏதேனும் அமைப்பு இருக்கிறதா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. மிகத் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யக் கூடாது. மங்களூர், பெங்களூரு குண்டுவெடிப்புகளுக்கு இடையே தொடர்பு கிடையாது. குண்டுவெடிப்பு தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in