ஹிமாச்சலப் பிரதேசம்: பாஜகவுக்கு வாக்களித்த 6 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம்

சட்டப்பேரவையில் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்ததாக பாஜக விமர்சனம்.
சுக்விந்தர் சிங் சுகுவுடனான சந்திப்புக்குப் பிறகு டிகே சிவகுமார் மற்றும் பூபிந்தர் சிங் ஹூடா
சுக்விந்தர் சிங் சுகுவுடனான சந்திப்புக்குப் பிறகு டிகே சிவகுமார் மற்றும் பூபிந்தர் சிங் ஹூடாANI

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 6 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் குல்தீப் சிங் பதானியா உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சுதிர் சர்மா, ரஜிந்தர் ராணா, தாவிந்தர் கே பூட்டோ, ரவி தாக்குர், சைதான்யா சர்மா மற்றும் இந்தர் தட் லகன்பால் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

2022 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஹிமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 இடங்களில் காங்கிரஸ் 40 உறுப்பினர்களையும், பாஜக 25 உறுப்பினர்களையும் கொண்டிருந்தன. சுயேச்சை உறுப்பினர்களாக 3 பேர் உள்ளார்கள். தற்போது 6 காங்கிரஸ் உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, சட்டப்பேரவையின் பலம் 62 ஆகக் குறைந்துள்ளது. இதன்மூலம், சட்டப்பேரவையின் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 32 ஆகக் குறைந்துள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்பதால், சட்டப்பேரவையில் அந்தக் கட்சியின் பலம் 34 ஆகக் குறைந்துள்ளது.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இழந்ததால், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக பாஜக கோரி வருகிறது.

இதனிடையே, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கட்டுப்பாட்டில் வைக்கும் நடவடிக்கையை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது. இன்று காலை ஷிம்லாவில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு சந்திப்பை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் பூபிந்தர் ஹூடா மற்றும் டிகே சிவகுமார் ஆகியோரும் பங்கேற்றார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in