கட்சியிலிருந்து ஷேக் ஷாஜகான் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்: திரிணமூல் காங்கிரஸ்

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷேக் ஷாஜகானை 10 நாள்கள் காவல் துறை கட்டுப்பாட்டில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷேக் ஷாஜகான் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக டெரிக் ஓ பிரையன் அறிவிப்பு
ஷேக் ஷாஜகான் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக டெரிக் ஓ பிரையன் அறிவிப்பு

நில அபகரிப்பு, பாலியல் தொந்தரவு வழக்கில் கைதான திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் அறிவித்துள்ளார்.

சந்தேஷ்காளி பகுதியில் நில அபகரிப்பு மற்றும் பாலியல் தொந்தரவு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த டெரிக் ஓ பிரையன் கூறியதாவது:

"ஷேக் ஷாஜகானை கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை இரண்டு வகை. ஒன்று வெறும் பேச்சு மட்டும்தான். மற்றொன்று, செயல். திரிணமூல் காங்கிரஸ் இதில் இரண்டாவது வகை. நாங்கள் இப்படி செய்வது முதன்முறையல்ல. கடந்த காலங்களிலும் நாங்கள் இப்படி செய்துள்ளோம். நாராயண் ரானே, ஹிமந்த விஸ்வ சர்மா மற்றும் சுவேந்து அதிகாரி ஆகியோரை இடைநீக்கம் செய்ய உங்களுக்குத் (பிரதமர் மோடி) துணிச்சல் உள்ளதா?.

மேற்கு வங்க காவல் துறைக்கு நீதிமன்றம் சுதந்திரம் கொடுத்தது. மேற்கு வங்க காவல் துறை இரு நாள்கள் எடுத்துக்கொண்டது. மேற்கு வங்க காவல் துறை பதிவு செய்த வழக்கில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நிரவ் மோடி தலைமறைவாகி 2,219 நாள்கள் ஆகின்றன. மெஹுல் சோக்ஸி 2,250 நாள்கள் ஆகின்றன. அவர்களை இன்னும் நீங்கள் இந்தியாவுக்குக் கொண்டுவரவில்லை" என்றார்.

இதனிடையே, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷேக் ஷாஜகானை 10 நாள்கள் காவல் துறை கட்டுப்பாட்டில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in