ராஜினாமா செய்யவில்லை, பெரும்பான்மையை நிரூபிப்பேன்: ஹிமாச்சலப் பிரதேச முதல்வர்

ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் மோசமாக நடந்துகொண்டதற்காக 15 பாஜக உறுப்பினர்களை சட்டப்பேரவைத் தலைவர் இடைநீக்கம் செய்துள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு (கோப்புப்படம்)
ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு (கோப்புப்படம்)ANI

ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தான் ராஜினாமா செய்யவில்லை என்றும் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடத்துக்கான மாநிலங்களவைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 6 காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தார்கள். இதனால், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் மோசமாக நடந்துகொண்டதற்காக 15 பாஜக உறுப்பினர்களை சட்டப்பேரவைத் தலைவர் இடைநீக்கம் செய்து அவையை ஒத்திவைத்தார். ஹிமாச்சலப் பிரதேச நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.

இதனிடையே, ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, பதவியை ராஜினாமா செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதை அந்த மாநில முதல்வர் அலுவலகம் மறுத்தது. முதல்வரும் தற்போது அந்தத் தகவலை மறுத்துள்ளார்.

"என்னிடம் யாரும் ராஜினாமா கடிதத்தைக் கேட்கவில்லை. நானும் யாரிடமும் ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கவில்லை. நாங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். நாங்களும் வெற்றி பெறுவோம், ஹிமாச்சலப் பிரதேச மக்களும் வெற்றி பெறுவார்கள்.

நான் பயப்படக்கூடிய ஆள் கிடையாது. நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதை உறுதியாகக் கூறுகிறேன். இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

நான் ராஜினாமா செய்ததாக பாஜக வதந்திகளைப் பரப்புகிறது. பாஜக சட்டப்பேரவையில் பிளவை உண்டாக்க முயற்சிக்கிறது. காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவர்களது கட்சியில் இணைய வேண்டும் என நினைக்கிறார்கள். காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்கிறது. பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில்தான் உள்ளார்கள்" என்றார் ஹிமாச்சலப் பிரதேச முதல்வர்.

ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் மொத்த பலம் 68. காங்கிரஸ் 40 உறுப்பினர்களையும், பாஜக 25 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. சுயேச்சை உறுப்பினர்கள் 3 பேர் உள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in