காங்கிரஸ் நேரடியாக பாகிஸ்தானை ஆதரிக்கிறது: பிரல்ஹாத் ஜோஷி

காங்கிரஸ் நேரடியாக பாகிஸ்தானை ஆதரிக்கிறது: பிரல்ஹாத் ஜோஷி

"காங்கிரஸ் நேரடியாக பாகிஸ்தானை ஆதரிக்கிறது": கர்நாடகாவின் விதான சவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுவதை பிரஹலாத் ஜோஷி கண்டித்தார்
Published on

கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் சையத் நசீர் ஹுசைன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், சட்டப்பேரவையில் அவரது ஆதரவாளர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியதற்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், பாகிஸ்தானை நேரடியாக ஆதரிக்கிறது என்று ஜோஷி குற்றம் சாட்டினார்.

செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவம் குறித்து பிரல்ஹாத் ஜோஷி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:

"இன்று, காங்கிரஸ் கட்சியிலிருந்து மாநிலங்களவைத் தேர்தலில் நசீர் ஹுசைன் வெற்றி பெற்ற பின்னர், கர்நாடக ஜனநாயகத்தின் மிகவும் புனிதமான சட்டப்பேரவையில், பாகிஸ்தான் சார்பாக 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷங்களை காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் எழுப்பியுள்ளனர்.

இதைக் கண்டிப்பதற்குப் பதிலாக, நசீர் ஹுசைன் இவ்விவகாரத்தைத் தவறாக வழிநடத்த முயற்சி செய்கிறார், யாரோ தவறான தகவல்களை அல்லது செய்திகளைப் பரப்புகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. காங்கிரஸ் இப்போது பாகிஸ்தானை நேரடியாக ஆதரிக்கிறது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் இதுகுறித்து அவர்களின் கருத்து என்ன என்று கேட்கிறேன்" என்று ஜோஷி உறுதியாகக் கூறினார்

"நசீர் ஹுசைன், கார்கேவின் பிரதிபலிப்பாக இருப்பவர். காங்கிரஸ் இவ்விவகாரத்தைத் தெளிவுபடுத்தட்டும். அவர்கள் இதைக் கண்டிக்கட்டும். இதைத் தீவிரமாக கவனித்து, இந்தச் சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக உள்துறை அமைச்சரிடம் கேட்டுள்ளேன்" என்று பிரல்ஹாத் ஜோஷி காணொளியில் கூறினார்.

இதற்கிடையில், மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் ஹுசைன் தனது சமூக ஊடகப் பக்கத்தில், இந்த சம்பவத்தைத் தெளிவுபடுத்தி ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் தன் முன்னிலையில் எந்தவொரு கோஷமும் எழவில்லை என்று மறுத்தார். மேலும் முறையான விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

logo
Kizhakku News
kizhakkunews.in