ஆந்திர பேரவைத் தேர்தல்: சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கூட்டணியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

கூட்டணியில் பாஜக இணையுமா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது
ஆந்திர பேரவைத் தேர்தல்: சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கூட்டணியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
ANI

ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 94 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி சார்பில் 24 தொகுதிகளிலும் போட்டியிடும் 118 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டணியில் பாஜக இணையுமா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது.

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாணும் இணைந்து தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். பாஜகவுடனான கூட்டணி அமைப்பது குறித்து திறந்த மனதோடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள். பாஜகவுடனான கூட்டணி குறித்து வெங்கைய நாயுடு தலைமையிலான குழுவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆந்திரத்தில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியுடனும் பாஜகவுடனும் ஜனசேனா கட்சி தொடர்ந்து பேசி வந்தது. ஆந்திரத்தில் ஆளுங்கட்சியைத் தோற்கடிக்க மூன்று கட்சிகளும் இணைந்து கூட்டணியாகத் தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதுகுறித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆகியோரை சந்திரபாபு நாயுடு தில்லியில் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் தலைமையிலான கூட்டணி சார்பில் 118 பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது. இதுவரையில் இல்லாத அளவுக்கு தெலுங்கு தேசம் கட்சி இம்முறை அதிக எண்ணிக்கையிலான புதிய வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. வேட்பாளர் தேர்வுமுறையிலும் தெலுங்கு தேசம் கட்சி நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. 1 கோடியே 3 லட்சத்து 33 ஆயிரம் பேரிடம் கருத்துகளைக் கேட்டு, வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இளைய தலைமுறையினர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் என சமூகத்தில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 28 முதுகலைப் பட்டம் பெற்றோர், 50 பட்டதாரிகள், 3 மருத்துவர்கள், 2 பிஎச்டி முடித்தோர் மற்றும் 1 ஐஏஎஸ் அதிகாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, "தெலுங்கு தேசம் - ஜேஎஸ்பி தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. மாநிலத்தின் எதிர்காலத்திற்காகக் கூட்டணியாக இணைந்து செயல்படுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in