பூரண நலம் பெற்ற பிரியங்கா காந்தி: ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் இணைகிறார்?

அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் யாத்திரையில் பங்கேற்பார்கள் என்றும், இண்டியா கூட்டணி வலுவாக இருப்பதாகவும் காங்கிரஸ் தலைமை நம்பிக்கை
பூரண நலம் பெற்ற பிரியங்கா காந்தி: ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் இணைகிறார்?
ANI

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் நடைபெறும் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் பங்கேற்பதாக தில்லி வட்டாரங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரியங்கா காந்தி, பூரண குணம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற வாரம் பாதயாத்திரையில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.

நீரிழப்பு மற்றும் வயிற்று வலி புகாரின் பேரில் தில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி, சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

"உ.பி.யில் பாத யாத்திரை வரும்போது அங்கே இணையலாம் என்று எதிர்பார்த்திருந்தேன். துரதிர்ஷ்டவசமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். குணமடைந்தவுடன் நிச்சயம் வருவேன். யாத்திரைக்கான ஏற்பாடுகளைச் செய்ய கடுமையாக உழைத்த உ.பி.யில் உள்ள நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வாழ்த்துகள்" என்று பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.

சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான கூட்டணி உறுதியான நிலையில் ராகுல் காந்தியின் பாத யாத்திரைக்கு உத்தரப் பிரதேசத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், சமாஜ்வாதி கட்சித் தலைவர்களையும் பாத யாத்திரையில் பங்கற்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட சமாஜ்வாதி கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் இந்த யாத்திரையில் பங்கேற்பார்கள் என்றும், இதன் மூலம் இண்டியா கூட்டணி வலுவாக இருக்கிறது என்கிற செய்தியை அழுத்தமாகப் பதிவு செய்ய முடியும் என்றும் காங்கிரஸ் நம்புகிறது.

மொராதாபாத்தில் இருந்து கிளம்பும் பிரியங்கா காந்தி அம்ரோஹா, சம்பல், புலந்த்ஷஹர், அலிகார், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா வழியாக ஃபதேபூர் சிக்ரிக்கு பயணம் செய்வார் என்றும் அங்கு ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் இணைவார் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்களும் பாதயாத்திரையில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in