சாதியின் பெயரால் மக்களைச் சுரண்டும் கட்சிகள்: இண்டியா கூட்டணி மீது பிரதமர் சாடல்

தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் பிளவை ஏற்படுத்த நினைப்பதோடு, அவர்களுக்கான நலத்திட்டங்களையும் எதிர்ப்பதன் மூலமாக...
பிரதமர் மோடி
பிரதமர் மோடிANI

சாதியின் பெயரால் மக்களைச் சுரண்டும் கட்சிகள் ஒருங்கிணைந்து அமைத்துள்ள கூட்டணிதான் இண்டியா கூட்டணி என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். தன்னுடைய தொகுதியான வராணாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியவர், இண்டியா கூட்டணி மீது அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் சாந்த் ரவிதாஸின் 647-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார்.

அப்போது பேசும்போது, "சாந்த் ரவிதாஸின் பிறந்தநாளின் புனிதமான நிகழ்வில், தொலைதூரத்திலிருந்து அவரது பிறந்த ஊருக்கு வந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். குறிப்பாக பஞ்சாபில் இருந்து வந்திருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று, வாரணாசி, ஒரு மினி பஞ்சாப் ஆகிவிட்டதாகத் தெரிகிறது. இந்தியா இன்று சாந்த் ரவிதாஸின் வழிகாட்டுதலில் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. அவரது ஆசீர்வாதத்தால் அனைத்தும் சாத்தியமாகியுள்ளது.

சாதியின் பெயரால் மக்களைத் தூண்டுவது என்பது மனிதநேயத்திற்கு எதிரானது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் பிளவை ஏற்படுத்த நினைப்பதோடு, அவர்களுக்கான நலத்திட்டங்களையும் எதிர்ப்பதன் மூலமாக அவர்களை வஞ்சிக்கும் இண்டியா கூட்டணியினரை மக்கள் எச்சரிக்கையோடு கையாளவேண்டும்.

பழங்குடியினப் பெண் ஒருவரை இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். தங்களின் குடும்பத்தினரின் நலன் மீது மட்டுமே அக்கறை கொண்டவர்களால் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் நலன் பற்றி சிந்திக்க முடியாது" என்றார்.

முன்னதாக வாரணாசியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டார். வாரணாசியின் சாலை இணைப்பை மேலும் மேம்படுத்த, பல்வேறு சாலை திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்.

வாரணாசியில் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்திற்கும், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், புதிய மருத்துவக் கல்லூரிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இண்டியா கூட்டணி பற்றி இதுவரை மோடி பல்வேறு விமர்சனங்களை செய்து வந்தாலும், முதல் முறையாக சாதிய அரசியலை மேற்கொள்வதாக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது காங்கிரஸ் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in