ஐந்து மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கூட்டணி உறுதி!

தில்லியில் மொத்தமுள்ள 7 இடங்களில் ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
ஐந்து மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கூட்டணி உறுதி!
ANI

தில்லி, குஜராத், ஹரியாணா, சண்டிகர் மற்றும் கோவா ஆகிய இடங்களில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது.

இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கூட்டணி இறுதியானதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தாலும்கூட, தில்லி உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிப்பதாகப் பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில், தில்லி, குஜராத், ஹரியாணா, சண்டிகர் மற்றும் கோவா ஆகிய இடங்களில் தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் தில்லியில் இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் கூறியதாவது:

"தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் புதுதில்லி, தில்லி மேற்கு, தில்லி தெற்கு மற்றும் தில்லி கிழக்கு ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. சாந்தினி சௌக், தில்லி வடக்கு மற்றும் தில்லி வடமேற்கு ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளில், காங்கிரஸ் 24 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பரூச் மற்றும் பாவ்நகர் ஆகிய இரு தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது.

ஹரியாணாவில் மொத்தம் 10 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 1 இடத்திலும் (குருஷேத்ரா) போட்டியிடுகின்றன.

சண்டிகரில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு காங்கிரஸ் போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோவாவில் இரு மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது" என்றார்.

செய்தியாளர் சந்திப்பில் உடனிருந்த ஆம் ஆத்மி எம்.பி. சந்தீப் பதக் கூறியதாவது:

"நேர்மையான, வலிமையான மாற்றுதான் நாட்டின் தற்போதைய தேவை. இதை மனதில்கொண்டு, சொந்த அரசியல் விருப்பங்களை ஒதுக்கிவைத்து, நாட்டு நலனை மட்டும் கருத்தில்கொண்டு, இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம். நாட்டுக்குதான் முன்னுரிமை, கட்சி இரண்டாவதுதான். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ் இங்கு போட்டியிடுகிறது, ஆம் ஆத்மி அங்கு போட்டியிடுகிறது என்று எதிர்கொள்ளப்போவதில்லை. இண்டியா இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது."

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in