பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பிரதமர் மோடி?

100 தொகுதிகளுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பிரதமர் மோடி இடம்பெறவிருப்பதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிANI

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் நிலையில் பாஜக தேசியத் தலைமை முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவிருக்கிறது.

100 தொகுதிகளுக்கான பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெறவிருப்பதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவின் மத்திய தேர்தல் குழு எதிர்வரும் வியாழக்கிழமை தில்லியில் கூடி, வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்யும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. முதல் 100 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்படலாம்.

முதல் பட்டியலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதுமுள்ள 543 இடங்களில் 370 இடங்களை வெல்ல பாஜக ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்துள்ள நிலையில் வேட்பாளர் தேர்விலும் ஆர்வம் காட்டி வருகிறது. முன்கூட்டியே வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது என்று தேசியத் தலைமை முடிவு செய்துள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி உள்ளிட்டவர்களின் தொகுதிகளை முன்கூட்டியே அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாரணாசி தொகுதியின் உறுப்பினராக பிரதமர் மோடி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். 2014-ல் 3.37 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி, 2019-ல் 4.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறையும் அவர் வாரணாசி தொகுதியில் போட்டியிடவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, வரும் மார்ச் 3-ல் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 100 நாள்களுக்கான செயல்திட்டம் குறித்தும், புதிய அறிவிப்புகள் குறித்தும் முடிவெடுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in