கோயில்களிடமிருந்து நிதி வசூலிப்பது புதிதல்ல: கர்நாடக ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் விளக்கம்

பொது தொகுப்பு நிதியின் தொகையை அதிகரிக்கவும், பக்தர்களின் பாதுகாப்புக்காகவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நிதியைப் பயன்படுத்தப்படுவதாக விளக்கம்.
(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோயில்களிலிருந்து நிதி வசூலிக்கும் நடைமுறை பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. இது புதிய நடைமுறை அல்ல என்று கர்நாடக போக்குவரத்து மற்றும் ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டப்பேரவையில் ஹிந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் திருக்கோயில்கள், வருமானத்தில் 10 சதவீதத்தை மாநில அரசுக்கு செலுத்த சட்ட மசோதா அனுமதிக்கிறது.

இது காங்கிரஸ் அரசின் ஹிந்து விரோத கொள்கையைக் காட்டுகிறது என்று கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த பாஜகவினர், மாநில அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்கள். மசோதா மூலம் காங்கிரஸ் அரசு தன்னுடைய கஜானாவை நிரப்ப முயற்சி செய்கிறது. ஏன் ஹிந்துக் கோயில்களை மட்டும் குறிவைத்து அதிலிருந்து வருமானம் பெற நினைக்கிறது என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள்.

இந்நிலையில் மசோதா குறித்து கர்நாடக போக்குவரத்து மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி செய்தியாளர்களிடம் விளக்கம் கொடுத்துள்ளார்.

"பொது தொகுப்பு நிதியின் தொகையை அதிகரிக்கவும், பக்தர்களின் பாதுகாப்புகாகவும் கோயில்கள் மற்றும் அவை சார்ந்த இடங்களின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நிதி பயன்படுத்தப்படும்."

மேலும், 2003-ல் இருந்து நடைமுறையில் இருந்து வருவதாகக் குறிப்பிட்டவர், ரூ. 5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள 3,000 சி கிரேடு கோயில்களில் இருந்து தர்மிகா பரிஷத்துக்குப் பணம் கிடைக்கவில்லை என்றும் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை வருமானம் உள்ள பி-கிரேடு கோயில்களில் இருந்து மொத்த வருமானத்தில் 5 சதவீதம் 2003 முதல் தர்மிகா பரிஷத்துக்குக் கிடைப்பதாகவும், தர்மிகா பரிஷத் ரூ. 25 லட்சத்திற்கு மேல் மொத்த வருமானம் கொண்ட கோயில்களிலிருந்து 10 சதவீத வருவாயைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

"ரூ. 10 லட்சம் வரை கோயில் வருமானம் இருந்தால் தர்மிகா பரிஷத்திற்கு நிதி செலுத்தத் தேவையில்லை. ரூ.10 லட்சம் முதல் ஒரு கோடிக்கும் குறைவான மொத்த வருமானம் உள்ள கோயில்களிலிருந்து 5 சதவீதம் வரி வசூலிக்கப்படும். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள கோயில்களிலிருந்து 10 சதவீத வரி வசூலிக்கப்படும். இவை அனைத்தும் தர்மிகா பரிஷத்தை சென்றடையும்" என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தர்மிகா பரிஷத்துக்கு அதிக நிதி கிடைக்கும் பட்சத்தில் மாநிலம் முழுவதுமுள்ள 40 ஆயிரம் அர்ச்சகர்கள், கோயில் நிர்வாகிகளுக்கு உதவமுடியும். அவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தது ரூ. 5 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்க உதவி செய்யும். காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்த ரூ. 7 கோடி முதல் ரூ. 8 கோடி வரை தேவைப்படுகிறது. அதை தர்மிகா பரிஷத் மூலமாக செலுத்த முடியும் என்கிறது ஆளும் காங்கிரஸ்.

இந்நிலையில் பாஜகவினர் தொடர்ந்து அரசை விமர்சித்து வருகிறார்கள். கோயில் நிதியை மக்கள் நலத் திட்டங்களுக்குத் திருப்பி விடாமல், கோயில் புனரமைப்புப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும். அரசு தன்னுடைய செலவில் செய்ய வேண்டியதைக் கோயில் நிதியிலிருந்து எடுத்து செய்வது ஹிந்து மக்களின் மத நம்பிக்கைகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று பாஜகவின் மாநிலத் தலைமை கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in