கமல்நாத்துக்குக் கதவுகள் திறக்கப்படாது: பாஜக தலைமை திட்டவட்டம்

கமல்நாத் உள்ளிட்ட தலைவர்களுக்கு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டது.
கமல்நாத் (கோப்புப்படம்)
கமல்நாத் (கோப்புப்படம்)ANI

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி, மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் முகமான கமல்நாத், பாஜகவில் இணையப்போவதாக வந்த செய்திகளை பாஜக மறுத்துள்ளது. பாஜகவுக்கு கமல்நாத் தேவையில்லை என்றும் அவருக்கான கதவுகள் மூடப்பட்டிருப்பதாகவும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட முன்னாள் முதல்வர் கமல்நாத், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் வரும் 27-ல் நடைபெறவுள்ளது. இதில் கமல்நாத் உள்ளிட்ட தலைவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் கமல்நாத் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்குப் பதிலாக அசோக் சிங் போட்டியிடுகிறார். மூத்த வழக்கறிஞரும் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் சிங்வி, ஹிமாச்சலப் பிரதேசத்தில் போட்டியிடுகிறார். தெலங்கானாவைச் சேர்ந்த ரேணுகா சௌத்ரி கர்நாடகத்தில் போட்டியிடுகிறார்

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் தோல்வி முகம் கண்ட கமல்நாத், அசோக் கெலாட் உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதன் பின்னணி குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின. அதிருப்தியில் உள்ள கமல்நாத், பாஜகவில் இணைவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது.

இந்நிலையில் கமல்நாத் பாஜகவில் இணைவதை நாங்கள் விரும்பவில்லை என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

"எங்கள் கட்சிக்கு கமல்நாத் தேவையில்லை என்று ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். அவருக்கான கதவுகள் மூடப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்நாத்தின் அடுத்த அரசியல் நகர்வு குறித்து யூகங்கள் வெளியான நிலையில் அவரது சொந்தத் தொகுதியான சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் விரக்தி இருப்பதை மாநிலத் தலைமையும் உணர்ந்திருப்பதாக போபால் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in