5 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி உடன்பாடு: ஆம் ஆத்மி முடிவு

பஞ்சாப் தவிர்த்து தில்லி, குஜராத், கோவா, சண்டிகர் மற்றும் ஹரியாணாவில் காங்கிரஸுடன் தொகுதி உடன்பாட்டை மேற்கொண்டுள்ளது.
பகவந்த் மான் (கோப்புப்படம்)
பகவந்த் மான் (கோப்புப்படம்)ANI

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு தொகுதி உடன்பாடு செய்துகொள்ள ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.

தில்லி, குஜராத், கோவா, சண்டிகர் மற்றும் ஹரியாணாவில் தொகுதிகளைப் பகிர்ந்துகொள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு எட்டியிருப்பதாக தில்லியிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தில்லியில் ஆம் ஆத்மி நான்கு இடங்களிலும், காங்கிரஸ் மூன்று இடங்களிலும் போட்டியிடும் வகையில் இரு கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன. பஞ்சாப் தவிர்த்து எஞ்சியுள்ள மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து செயல்பட ஆம் ஆத்மி முடிவெடுத்துள்ளது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களான கோவா, குஜராத், சண்டிகர் உள்ளிட்ட இடங்களிலும் காங்கிரஸ் கட்சியோடு ஆம் ஆத்மி கூட்டணியில் இணைகிறது.

குஜராத்தில் பரூச் மற்றும் பாவ்நகர் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஆம் ஆத்மி நேரடியாகப் போட்டியிடுகிறது. சைதர் வைசவா மற்றும் உமேஷ் பாய் மக்வானா ஆகியோர் ஏற்கெனவே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி எந்த வேட்பாளரையும் நிறுத்தவில்லை என்றாலும் 2022 சூரத் மாநகராட்சி தேர்தலில் 5 இடங்களைப் கைப்பற்றியதன் மூலம் தன்னுடைய செல்வாக்கை நிரூபித்துள்ளது.

சண்டிகரைப் பொறுத்தவரை காங்கிரஸ் ஒரேயொரு தொகுதியில் போட்டியிடுகிறது. அதேபோல் ஹரியாணாவில் ஆம் ஆத்மி ஒரேயொரு தொகுதியில் போட்டியிடுகிறது. கோவாவில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தெற்கு கோவா தொகுதியில் இருந்து போட்டியிடுவதாக இருந்த ஆம் ஆத்மி தன்னுடைய வேட்பாளரை திரும்பப் பெற்றிருக்கிறது. அதே இடத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட இருக்கிறது.

பாஜக வசம் உள்ள வடக்கு கோவா தொகுதியில் இரு கட்சிகளில் எது போட்டியிடும் என்று முடிவு செய்யப்படவில்லை. தில்லியில் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் பிற மாநிலங்களில் உள்ள சிக்கல்களை எளிதாகத் தீர்த்துவிடலாம் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது.

பஞ்சாபைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 13 இடங்களிலும் ஆம் ஆத்மி நேரடியாகப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சியை விட செல்வாக்கான கட்சியாக ஆம் ஆத்மி இருப்பதால் அனைத்து இடங்களிலும் நேரடியாகப் போட்டியிடுகிறது.

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றி, இண்டியா கூட்டணிக்குத் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.

கூட்டணியாக செயல்படுவதன் மூலம் பாஜகவை வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை வலுப்பெற்றிருப்பதன் காரணமாக தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்து முடிந்திருப்பதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in