மராத்தா இடஒதுக்கீடு கிடைத்தும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

50 சதவீத உச்சவரம்பைத் தாண்டிய தனி இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. இது சட்டபூர்வ ஆய்வில் செல்லுபடியாகாது என்பதால் உண்ணாவிரதம் தொடர்கிறது
மராத்தா இடஒதுக்கீடு கிடைத்தும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்
ANI

மஹாராஷ்டிரத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜரங்கே பாட்டீல், தன்னுடைய போராட்டம் தொடர்வதாக அறிவித்துள்ளார். 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக நேற்று மஹாராஷ்டிர சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்பட்ட நிலையிலும் உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்திருக்கிறார்.

மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜரங்கே பாட்டீல், மராத்தா மக்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசு தினத்தன்று உண்ணாவிரதப் போராடத்தை தொடங்கினார். மும்பைக்கு பேரணியாக வந்தவர், மராத்தா மக்களின் இட ஒதுக்கீடு விஷயத்தில் அவசரச் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

மனோஜ் ஜரங்கே பாட்டீலை சந்தித்த மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதாக உறுதிமொழி அளித்தததை தொடர்ந்து உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. நேற்று நடந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இடஒதுக்கீட்டை பத்து ஆண்டுகள் கழித்து மறுபரிசீலனை செய்யவும் வழி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இடஒதுக்கீடு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் மனோஜ் ஜரங்கே பாட்டீல், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டார்.

"ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம். ஆனால், அரசோ 50 சதவீத உச்சவரம்பைத் தாண்டிய தனி இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. இது சட்டபூர்வ ஆய்வில் செல்லுபடியாகாது" என்று தெரிவித்துள்ளவர், "நாங்கள் கும்பிகள். ஏற்கனவே ஓபிசி பிரிவில் இருக்கிறோம். எங்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவையில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இதுபோன்ற முயற்சிகள் 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீறியதற்காக நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டன. 2014 தேர்தலுக்கு முன்பாக பிருத்விராஜ் சவான் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசு மராத்தியர்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அவசரச் சட்டத்தை வெளியிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 சதவீத வரம்பை காரணம் காட்டி, மும்பை உயர்நீதிமன்றம் ரத்த செய்திருந்தது.

2018 ஆம் ஆண்டில், தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசும், மராத்தியர்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தது, இதுவும் 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை மீறியதால் 2021ல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே அரசு அறிமுகப்படுத்தியுள்ள இடஒதுக்கீடும் நீதிமன்ற தலையீட்டில் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in