சண்டிகர் மேயர் தேர்தல் தீர்ப்பு: உச்ச நீதிமன்றத்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி

"பாஜகவை வீழ்த்த முடியாது என்றார்கள். ஒற்றுமையுடன் சரியான திட்டமிடலுடன், சரியான வியூகத்தை வகுத்து கடுமையாக உழைத்தால் பாஜகவை வீழ்த்த முடியும்."
அரவிந்த் கெஜ்ரிவால் (கோப்புப்படம்)
அரவிந்த் கெஜ்ரிவால் (கோப்புப்படம்)ANI

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்ததற்கு, கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

"உண்மையைத் தோற்கடிக்க முடியாது. சண்டிகர் மேயர் தேர்தலில் அரசியலமைப்பும், ஜனநாயகமும் வெற்றி பெற்றுள்ளன. உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி.

இந்திய வரலாற்றில் இப்படி நிகழ்வது இதுதான் முதன்முறை என நினைக்கிறேன். உச்ச நீதிமன்றத்துக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். நாட்டில் சர்வாதிகாரப்போக்கு நிலவுகிறது. ஜனநாயகம் நசுக்கப்படுகிறது. அனைத்து அரசு நிறுவனங்களும் நசுக்கப்படுகின்றன. இப்படியான சூழலில் உச்ச நீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை அளித்திருப்பது ஜனநாயகத்தில் குறிப்பிடத்தக்கது. இண்டியா கூட்டணிக்கு முதல் பெரிய வெற்றி.

பாஜகவிடமிருந்து வெற்றியைப் பறித்துள்ளோம். தேர்தலையும், வாக்குகளையும் அவர்கள் திருடினார். எனினும், நாங்கள் இறுதிவரை போராடி வெற்றி பெற்றுள்ளோம். பாஜகவை வீழ்த்த முடியாது என்றார்கள். ஒற்றுமையுடன் சரியான திட்டமிடலுடன், சரியான வியூகத்தை வகுத்து கடுமையாக உழைத்தால் பாஜகவை வீழ்த்த முடியும்" என்றார் அவர்.

வழக்கு விவரம்:

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் 12 வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும், பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 வாக்குகளைப் பெற்றதாகவும், 8 வாக்குகள் செல்லாத வாக்குகள் என்றும் கடந்த 30-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இதை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் குல்தீப் குமார் வழக்கு தொடர்ந்தார். அங்கு இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து, குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உச்ச நீதிமன்றத்தில் செல்லாத வாக்குகள் என அறிவித்த 8 வாக்குச் சீட்டுகள் சிதைக்கப்பட்டிருந்ததாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதையடுத்து, நீதிமன்றம் அதை நேரடியாக ஆய்வு செய்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதுபோல அந்த 8 வாக்குச் சீட்டுகள் சிதைக்கப்படவில்லை என்றும், அவை அனைத்திலும் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாருக்கு ஆதரவாகவே வாக்குகள் இருந்தன என்றும் உச்ச நீதிமன்றம் கண்டறிந்தது. இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் செல்லாத வாக்குகள் என அறிவித்த 8 வாக்குகளையும் கணக்கில் சேர்த்து ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் மொத்தம் 20 வாக்குகளைப் பெற்றதையடுத்து, அவர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மேலும், மேயர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரை சாடிய உச்ச நீதிமன்றம், அவருக்கு எதிராக வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in