சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி: உச்ச நீதிமன்றம் அதிரடி

பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அனில் மசி அறிவித்த முடிவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு ரத்து செய்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்ANI

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அனில் மசி அறிவித்த முடிவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு ரத்து செய்துள்ளது.

ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாருக்கு ஆதரவாக விழுந்த வாக்குச் சீட்டுகளை செல்லாத வாக்குகளாக அறிவிப்பதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் அந்த வாக்குச் சீட்டுகளை வேண்டுமென்றே சிதைத்ததை உறுதி செய்தவுடன் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. சிதைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறிய வாக்குச் சீட்டுகளை உச்ச நீதிமன்றம் இன்று நேரடியாக ஆய்வு செய்தது. அதில் எந்தவொரு வாக்குச் சீட்டும் சிதைக்கப்படவில்லை என்பதையும், அந்த 8 வாக்குச் சீட்டுகளிலும் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு சாதகமாகவே வாக்குகள் இருந்ததையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் அடையாளமிட்டு செல்லாது என அறிவித்த 8 வாக்குச் சீட்டுகளையும் கணக்கில் கொண்டு ஆம் ஆத்மி வேட்பாளர் ஏற்கெனவே பெற்ற 12 வாக்குகளுடன் சேர்த்து, மொத்தம் 20 வாக்குகளைப் பெற்றதால் அவரே சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேயர் தேர்தலின் முடிவுகளை சட்டவிரோதமாக மாற்றியதாக தேர்தல் நடத்தும் அலுவலரை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தள்ளது. மேலும், 8 வாக்குச் சீட்டுகள் சேதப்படுத்தப்பட்டிருந்ததாக உச்ச நீதிமன்றத்தில் பொய்யான கருத்துகளைப் பதிவு செய்ததற்காக அவர் மீது வழக்கு தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விவரம்:

சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் 12 வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும், பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 வாக்குகளைப் பெற்றதாகவும், 8 வாக்குகள் செல்லாத வாக்குகள் என்றும் கடந்த 30-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். இதை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் குல்தீப் குமார் வழக்கு தொடர்ந்தார். அங்கு இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இதையடுத்து, குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உச்ச நீதிமன்றத்தில் செல்லாத வாக்குகள் என அறிவித்த 8 வாக்குச் சீட்டுகள் சிதைக்கப்பட்டிருந்ததாக தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதையடுத்து, நீதிமன்றம் அதை நேரடியாக ஆய்வு செய்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதுபோல அந்த 8 வாக்குச் சீட்டுகள் சிதைக்கப்படவில்லை என்றும், அவை அனைத்திலும் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமாருக்கு ஆதரவாகவே வாக்குகள் இருந்தன என்றும் உச்ச நீதிமன்றம் கண்டறிந்தது. இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் செல்லாத வாக்குகள் என அறிவித்த 8 வாக்குகளையும் கணக்கில் சேர்த்து ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் மொத்தம் 20 வாக்குகளைப் பெற்றதையடுத்து, அவர் வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மேலும், மேயர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலரை சாடிய உச்ச நீதிமன்றம், அவருக்கு எதிராக வழக்கு தொடர உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in