சண்டிகர் மேயர் தேர்தலில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை: உச்ச நீதிமன்றம்

சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குச் சீட்டில், தான் எக்ஸ் எனக் குறிப்பிட்டு அடையாளமிட்டதாக உச்ச நீதிமன்றம் முன்பு தேர்தல் நடத்தும் அலுவலர் ஒப்புக்கொண்டார்.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்ANI

சண்டிகர் மேயர் தேர்தலில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சண்டிகரில் கடந்த மாதம் 30-ம் தேதி மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இணைந்து போட்டியிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணி, இண்டியா கூட்டணி இடையிலான முதல் நேரடி மோதல் என்று இந்தத் தேர்தல் பார்க்கப்பட்டது. தேர்தல் நடைபெற்ற அன்றைய நாள் மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காங்கிரஸ், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் 12 வாக்குகளை மட்டுமே பெற்றார். பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.

தேர்தலில் தோல்வியடைந்த குல்தீப் குமார், உடனடியாகத் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீட்டார். இது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் குல்தீப் குமார்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, "தேர்தல் நடத்தும் அலுவலர் இப்படிதான் தேர்தலை நடத்துவாரா?. இது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயல். ஜனநாயகப் படுகொலை. தேர்தல் நடத்தும் அலுவலரை விசாரிக்க வேண்டும். இதுதான் தேர்தல் நடத்தும் அலுவலரின் நடத்தையா?"என்றார்.

வாக்குச் சீட்டு, காணொலிகள் உள்பட தேர்தல் நடைமுறையில் இருந்த அனைத்தையும் பாதுகாக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை வரை சண்டிகர் மாநகராட்சி கூட்டங்களுக்குத் தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மேயர் தேர்தலை நடத்திய அலுவலர் அனில் மாசி உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். சண்டிகர் தேர்தலில் 8 வாக்குச் சீட்டில் தான் எக்ஸ் எனக் குறிப்பிட்டு அடையாளமிட்டதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் ஒப்புக்கொண்டார்.

சண்டிகர் அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மேயர் தேர்தலில் சில வாக்குச் சீட்டுகள் கிழிந்த நிலையில் இருந்ததாகக் கூறினார். மேலும், உயர் நீதிமன்றம் பார்வையிடட்டும் என அவர் தெரிவிக்க, உச்ச நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறுகையில், "எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத புதிய தேர்தல் அலுவலரை நியமிக்கும்படி துணை ஆணையரை அறிவுறுத்துகிறோம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதற்கு முன்பிலிருந்தே வாக்கு எண்ணிக்கை நடவடிக்கையை மீண்டும் தொடரலாம். தேர்தலை நடத்திய அலுவலர் வாக்குச்சீட்டில் அடையாளமிட்டிருந்தாலும், தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம். இந்த நடைமுறை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.

உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் இதற்கென ஓர் அதிகாரியை நியமித்து, வாக்குச் சீட்டுகளை இங்கு எடுத்து வரட்டும். நாமே அந்த வாக்குச் சீட்டுகளைப் பார்வையிடலாம்" என்றார்.

சண்டிகர் மேயர் பதவிக்குப் புதிதாக தேர்தல் நடத்த வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in