விவசாயிகள் போராட்டம்: பஞ்சாபில் 7 மாவட்டங்களில் இணையச் சேவை முடக்கம்

"மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி, இதற்குத் தீர்வு காண அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது."
விவசாயிகள் போராட்டம்: பஞ்சாபில் 7 மாவட்டங்களில் இணையச் சேவை முடக்கம்
ANI

விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதையடுத்து, பஞ்சாபில் 7 மாவட்டங்களில் பிப்ரவரி 24 வரை இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது.

பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற வேண்டும், கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சன்யுக்த் கிசான் மோர்ச்சா மற்றும் பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி ஆகிய விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. தில்லியை நோக்கிய இவர்களது பேரணி ஹரியாணாவில் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன.

இதனிடையே, மத்திய அரசு விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு ஹரியாணா அரசு ஏற்கெனவே 7 மாவட்டங்களில் பிப்ரவரி 19-ம் தேதி வரை செல்ஃபோன் இணைய சேவை மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்குத் தடை விதித்துள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 17 முதல் 24 வரை இணைய சேவைக்குத் தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. விவசாயிகள் போராட்டம் ஷம்பு எல்லையில் 6-வது நாளை எட்டியுள்ளது.

போராட்டம் குறித்து பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச்செயலாளர் சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், "ஷம்பு எல்லையில் இன்று 6-வது நாள். இன்றும் அரசுடன் 4-ம் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறோம். மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி, இதற்குத் தீர்வு காண அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளது" என்றார்.

தில்லியை நோக்கிய விவசாயிகளின் பேரணி பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கியது. இந்தப் பேரணி ஷம்பு எல்லையில் 6-வது நாளாக முகாமிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள், விவசாய சங்கங்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in