தில்லி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த ஆம் ஆத்மி

54 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
தில்லி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்த ஆம் ஆத்மி
ANI

தில்லி சட்டப்பேரவையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு 54 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

தில்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீர்மானம் கொண்டு வந்தார். ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பாஜக குதிரைப் பேரம் நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கெஜ்ரிவால் தீர்மானம் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெற்றது.

தில்லி சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில் ஆம் ஆத்மி 62 உறுப்பினர்களையும், பாஜக 8 உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. இதில் துணைநிலை ஆளுநர் உரையின்போது குறுக்கிட்டதாகக் கூறி பாஜக உறுப்பினர்கள் 7 பேர் பட்ஜெட் கூட்டத்தொடரிலிருந்து நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.

இந்த நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. 62 ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர்களில் 54 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிறையிலிருப்பதாகவும், சிலர் உடல்நலம் சரியில்லாததாலும், சிலர் வெளியூரிலிருப்பதாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

முன்னதாக, தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை அழைப்பாணைகள் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்புடைய வழக்கில், பிப்ரவரி 17-ல் நேரில் ஆஜராகுமாறு தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவால், பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளதாலும் நேரில் ஆஜராக முடியவில்லை அனுமதி கோரினார். இதையடுத்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை சிறப்பு நீதிமன்றம் மார்ச் 16-க்கு ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in