குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முயற்சி செய்தேனா?; ஜார்க்கண்ட் ஆளுநர் விளக்கம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஹேமந்த் சோரனை ஆளுநர் மாளிகை கேட்டுக்கொண்டதா?
சம்பாய் சோரன் பதவியேற்பு விழாவில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் (இடது)
சம்பாய் சோரன் பதவியேற்பு விழாவில் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் (இடது)ANI

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டதில் ஆளுநர் மாளிகைக்கு எந்த தொடர்பும் இல்லையென்று ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆளுநருக்குத் தொடர்பு இருந்ததாகவும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முயற்சி செய்ததாகவும் ஹேமந்த் சோரன் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்து விளக்கமளித்துள்ளார்.

ஜனவரி 31 அன்று அமலாக்கத்துறையினரின் ஏழு மணிநேர விசாரணைக்குப் பின்னர் ஆளுநர் மாளிகைக்கு வந்த ஹேமந்த் சோரன், தன்னுடைய ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார். இதையடுத்து சம்பாய் சோரன், முதல்வராகத் தேர்வானார். பின்னர் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்ற ஹேமந்த் சோரன், கைது செய்யப்பட்டதில் ஆளுநர் மாளிகைக்குத் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை இன்று சந்தித்த ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நாளில் நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

"அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னதாகவே முதல்வர் பதவியை விட்டு விலகியதாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு அமலாக்கத்துறையினரோடு தொடர்பு இருந்தாகக் குறிப்பிடுவது ஏற்கத்தக்கதல்ல. அன்று வந்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் யாரென்பது எனக்குத் தெரியாது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ஹேமந்த் சோரனை ஆளுநர் மாளிகை கேட்டுக்கொண்டதா? இதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும்.

முதல்வர் பதவியிலிருந்து ஹேமந்த் சோரன் விலகியிருப்பதால், அடுத்தக்கட்ட நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் மாளிகையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. முதன்மைச் செயலருக்கு அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது. ராஜினாமா செய்வதற்காக ஹேமந்த் சோரன் ஆளுநர் மாளிகைக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. முதல்வர் அலுவலகத்திலிருந்தும் தொடர்பு கொண்டு ஆளுநர் மாளிகைக்கு வரவிருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் வரமுடியாது என்றும் மூத்த அமைச்சர்களோடு வருவதற்கு அனுமதி வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகையைத் தொடர்பு கொண்டு தலைமைச் செயலாளர் கேட்டார். மூன்று மூத்த அமைச்சர்கள் முதல்வருடன் உடன் வரலாம் என்று நானும் தெரிவித்தேன்

சம்பாய் சோரனை ஆட்சி அமைக்க அழைப்பதில் ஜனநாயக நடைமுறை பின்பற்றப்பட்டது. வித்தியாசமான அரசியல் சூழல் என்பதால் சட்ட ஆலோசனையை மேற்கொண்டேன். மறுநாளே சம்பாய் சோரனை ஆட்சியமைக்க வருமாறு கேட்டுக்கொண்டேன். அடுத்த இரு நாள்களில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எந்த நெருக்கடியும் தரப்படவில்லை. பத்து நாள்கள் வரை அவகாசம் தரப்பட்டது

ஹேமந்த் சோரன் பதவி விலகியது குறித்து நிறைய பேர் கேள்வி எழுப்பினார்கள். புதிய அரசு அமைவதை நீங்கள் விரும்பவில்லையா என்று கேள்வி எழுந்தது. உரிய சட்ட ஆலோசனைக்குப் பின்னரே சம்பாய் சோரனுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம். எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முயற்சி செய்ததாகச் சொல்லப்படுவது தவறு" என்று ஆளுநர் தெரிவித்தார்.

பிப்ரவரி 5 அன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற ஆளுநர் உரையின் போது ஆளும் கூட்டணியின் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியது குறித்தும் பேசிய ஆளுநர், “மாநில அரசின் சார்பாக உரையாற்றினேன். அவர்களுடைய அரசை எதிர்த்து ஏன் குரல் எழுப்பினார்கள் என்று தெரியவில்லை. இதுபோல் வேறெங்கும் நடந்ததில்லை. புதிய முதல்வர் சாதாரண பின்னணியிலிருந்து வந்தவர். மக்களின் உண்மையான தேவைகள் என்னவென்பது அவருக்குத் தெரியும். அவற்றையெல்லாம் அவர் நிறைவேற்ற வேண்டும். மன உறுதியுடன் ஊழலை ஒழிக்க வேண்டும்" என்று புதிய முதல்வருக்கு வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in