பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் ஆதரவாளர்கள் முன்னிலை!

கூட்டணியின் உதவியுடன் ஆட்சியமைக்கப் போவதாக நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இம்ரான் கான்
இம்ரான் கான்ANI

பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இம்ரான் கானின் பிடிஐ ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளார்கள். 99 இடங்களைப் பெற்றுள்ள இம்ரான் கான், தேர்தலில் தன்னுடைய கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். கூட்டணியின் உதவியுடன் ஆட்சியமைக்கப் போவதாக நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

இதுவரை வெளியான செய்திகளின்படி இம்ரான் கானின் கட்சியும், அவரது ஆதரவைப் பெற்ற சுயேட்சைகளும் முன்னிலையில் உள்ளார்கள். அடுத்த இடத்தில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி உள்ளது. மொத்தமுள்ள 266 இடங்களில் 133 இடங்களில் வெற்றி பெறும் கட்சியால் தான் ஆட்சியமைக்க முடியும். ஆனால் இந்தத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மையான இடங்கள் கிடைக்கப் போவதில்லை என்பதால் பாகிஸ்தான் அரசியல் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.

பாகிஸ்தானில் வியாழன் அன்று வாக்குப்பதிவு முடிந்ததும் ஆரம்பமான வாக்கு எண்ணிக்கை, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள், முன்னிலை நிலவரங்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுவரை அறிவிக்கப்பட்டவை: 250

இம்ரான் கானின் பிடிஐ ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் – 99

நவாஸ் ஷெரீப் தலைமையிலான PML-N – 71

பிலாவல் பூட்டோ-சர்தாரியின் PPP – 53

மற்றவை – 27

250 இடங்களுக்கான முடிவுகளை அறிவித்த நிலையில், இம்ரான் கானின் பிடிஐ ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 99 இடங்களையும், நவாஸ் ஷெரீப் தலைமையிலான PML-N மற்றும் பிலாவல் பூட்டோ-சர்தாரியின் PPP முறையே 71 மற்றும் 53 இடங்களைப் பெற்றுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, நவாஸ் ஷெரீப் மற்றும் இம்ரான் கான் தலைமையிலான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. முன்னதாக இணையவழித் தொடர்பில் சிக்கல் இருப்பதால் வாக்கு எண்ணிக்கை தாமதாகும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் (ECP) சிறப்புச் செயலாளர் ஜாபர் இக்பால் தெரிவித்திருந்தார். சரியான இணைய இணைப்பு இல்லாத காரணத்தால் நாடெங்கிலும் உள்ள வாக்குச்சாவடிகளிலிருந்து சரியான தகவல்களை உடனடியாகப் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சிறையில் இருக்கும் இம்ரான் கான், ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகக் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாவதில் ஏற்படும் தாமதம், நிதிச் சந்தைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். தொங்குப் பாராளுமன்றம் அமையும் என்று வெளியாகும் செய்திகளால் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. கராச்சியின் பங்குக் குறியீடு தொடர்ந்து சரிவை பெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தானில் நிலையான ஆட்சி வரவேண்டும் என்பதே பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in