தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ. 1,290 கோடிகளைப் பெற்ற பாஜக

பாஜகவின் கட்சி நிதி ரூ. 4,456.18 கோடியிலிருந்து ரூ. 5,424.71 கோடியாக உயர்ந்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ. 1,290 கோடிகளைப் பெற்ற பாஜக
ANI

நூற்றாண்டுக் கால கட்சியான காங்கிரஸ் கட்சியை விட பெரிய பணக்காரக் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. ஓராண்டில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த நிதியை விட ஐந்து மடங்கு அதிக கட்சி நிதி பாஜகவுக்கு கிடைத்துள்ளது.

2022-2023-ம் ஆண்டில் பாஜக கட்சிக்குக் கிடைத்த கட்சி நிதியானது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 23% அதிகரித்துள்ளது. ஓராண்டில் மட்டும் பாஜகவுக்குக் கட்சி நிதியாக ரூ. 2,360.84 கோடி கிடைத்துள்ளது என்கிற தகவல், தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பாஜக கட்சியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த கட்சி நிதியை விடவும் ஐந்து மடங்கு அதிகம்.

கடந்த சில ஆண்டுகளைப் போல் கட்சிக்கு கிடைத்த நிதியில் பெரும் பகுதியானது தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பெறப்பட்டுள்ளது. (தேர்தல் பத்திரங்கள் - அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கான ஒரு வழிமுறை. எஸ்பிஐ வங்கி, தேர்தல் பத்திரங்களை வெளியிடுகிறது)

2022-2023-ம் ஆண்டில் ரூ. 2,800.36 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி விற்றுள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின்படி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் கோரிய மனுவில் அந்த வங்கி இவ்வாறு பதில் அளித்துள்ளது. பாஜக ஆண்டறிக்கையின்படி, விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் 46% பாஜகவுக்குச் சென்றுள்ளது. கட்சியின் வருமானத்தில் 61% (ரூ. 1,294.14 கோடி) நிதியானது, தேர்தல் பத்திரங்கள் மூலமாகத் தன்னார்வலர்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.

இதனால் பாஜகவின் கட்சி நிதி ரூ. 4,456.18 கோடியிலிருந்து ரூ. 5,424.71 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆண்டறிக்கையின்படி, 2022-2023-ம் ஆண்டில் மட்டும் 1,361.68 கோடி ரூபாயை பாஜக செலவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான செலவுகள் அதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. 80% செலவுகள் அதாவது 1,092.15 கோடி, தேர்தல் செலவுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகளவில் விளம்பரங்களுக்காக ரூ. 432.14 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு அடுத்தப் பெரிய கட்சியாக காங்கிரஸ் தொடர்ந்து இருந்து வருகிறது. 2022-2023-ம் ஆண்டில் 452.37 கோடி ரூபாய் நிதியாகப் பெற்றிருப்பதாகவும், 467.13 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாகவும் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாரத் ஜோடோ யாத்திரைக்காக ரூ. 71.83 கோடி ரூபாயை காங்கிரஸ் செலவிட்டுள்ளது.

20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்சி நிதியளித்தவர்களின் பெயர் மற்றும் பான் எண்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 6 தேசியக் கட்சிகளில் கடைசி நேரத்தில் ஆண்டறிக்கை சமர்ப்பித்த கட்சியும் பாஜகதான் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in