போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் மற்றும் பணி நியமனங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1 கோடி வரை அபராதமும் விதிக்கப் புதிய மசோதா வழிவகை செய்கிறது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் முன்மொழிந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து, இன்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே மசோதா, மக்களவையில் கொண்டு வரப்பட்டு பிப்ரவரி 6-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதன்படி போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

மசோதான மீதான விவாதத்திற்குப் பதிலளித்த மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சரான ஜிதேந்திர சிங், இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் முக்கியமான பிரச்னையைத் தடுக்க வேண்டியுள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுபவர்களைப் புதிய சட்டம் தடுக்கும். இந்தியாவின் இளைஞர் சக்தி, ஒரு சிலரின் கைகளில் சிக்கிக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்றவர், புதிய சட்டத்தின் மூலம் நாட்டின் எதிர்காலம் காப்பாற்றப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் வட இந்திய மாநிலங்களில் வியாபம் ஊழல் பெரிய அளவில் பேசப்பட்டது. மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆளுநர் மாளிகை தொடங்கி கீழ்நிலையில் உள்ள அரசு அமைப்புகள் வரை அனைத்து அதிகார மையங்களுக்கும் தொடர்பு இருந்ததாகப் பேசப்பட்டது. சி.பி.ஐ மேற்கொண்ட விசாரணையில் 31 பேர் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டார்கள். ஆள்மாறாட்டம் செய்தவர்கள், இடைத்தரகர்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in