சரத் பவார் கட்சிக்குப் புதிய பெயர்: உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு?

30 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய அடையாளமாக இருந்த கடிகாரச் சின்னத்தை சரத் பவார் இழந்துள்ளார்
சரத் பவார் கட்சிக்குப் புதிய பெயர்: உதயசூரியன் சின்னம் ஒதுக்கீடு?
ANI

அங்கீகாரம் மறுக்கப்பட்ட சரத் பவாரின் கட்சிக்கு என்.சி.பி (சரத் சந்திர பவார்) என்று பெயரிடப்பட்டிருப்பதாகத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆறு இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் சரத்பவார் தலைமையிலான கட்சியைத் தனிப்பிரிவாக ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. உதயசூரியன் சின்னமும் கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, இரண்டாகப் பிளவுபட்டு அஜித் பவார் தலைமையிலான பிரிவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலரான சிவசேனா கட்சிக்கும் மற்றும் மஹாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கும் போட்டி நடந்ததைப் போலவே தேசியவாத காங்கிரஸ் கட்சி விஷயத்திலும் நடந்தேறியுள்ளது.

கட்சியின் 53 எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் மட்டுமே சரத் பவார் பக்கம் இருக்கிறார்கள். பாஜக கூட்டணியில் சேர்ந்த அஜித் பவார் வசம் 41 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019ல் இதே போன்ற அணித் தாவலை செய்து தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான ஆட்சியில் அஜித் பவார் இடம்பெற்றார். எனினும் ஒரே நாளில் ஆட்சி கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுடன் கூட்டணி அமைத்து மஹாராஷ்டிரா துணை முதல்வராகப் பதவியேற்ற அஜித் பவார் தலைமையிலான பிரிவுக்குச் சட்டமன்றத்தில் அதிக எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அதற்கு அங்கீகாரம் கிடைத்தது. கட்சியின் சொத்துகள், வங்கிக்கணக்குள் உள்ளிட்டவற்றையும் ஒதுக்குவதாகவும், கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதிகள், நிர்வாகிகள் அஜித் பவார் வசம் அதிகமாக இருப்பதால் எண்ணிக்கையின் அடிப்படையில் முடிவெடுத்திருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு சரத் பவார் தனது பிரிவுக்கு ஒரு பெயரைத் தேர்வு செய்யுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய அடையாளமாக இருந்த கடிகார சின்னத்தை சரத் பவார் இழந்துள்ளார். உதய சூரியன், ஒரு ஜோடி கண்ணாடி, ஆலமரம் உள்ளிட்ட மூன்று சின்னங்களிலும் ஏதாவது ஒன்று சரத்பவாருக்கு கிடைக்குமென்று தெரிகிறது.

குறிப்பாக மாநிலங்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருவதால் சரத் பவார் தலைமையிலான பிரிவுக்குப் புதிய சின்னம் தேவைப்படுகிறது. கட்சியின் புதிய பெயர் மற்றும் சின்னம் குறித்து மஹராஷ்டிரா மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்ப்பது பெரிய சவாலாக இருக்கும் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in