காங்கிரஸ் கட்சியின் தில்லி போராட்டத்தைக் கண்டித்து பாஜக எம்.பி.க்கள் ஆளுநரிடம் மனு

கர்நாடகாவுக்கான உரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டி இன்று தில்லியில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
காங்கிரஸ் கட்சியின் தில்லி போராட்டத்தைக் கண்டித்து பாஜக எம்.பி.க்கள் ஆளுநரிடம் மனு
ANI

கர்நாடக மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மாநில அரசு நிதியைத் தவறாக பயன்படுத்துவதாக பாஜக எம்.பி.க்கள் ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்கள்.

கர்நாடகாவுக்கான உரிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டி இன்று தில்லியில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்று ஆதரவளிக்குமாறு கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளின் பிரநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யான நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டார்கள். பாஜக, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் புறக்கணித்தார்கள். இதுகுறித்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, கட்சிப் பேதங்களைத் தாண்டி மாநில நலனுக்காகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டை எதிர்க்கும் போராட்டம். எந்தக் கட்சிக்கும் எதிரான போராட்டம் அல்ல. அநீதிக்கு எதிரான போராட்டம் என்று தெரிவித்தார்.

வரி வசூலில் கர்நாடகா 2-வது இடத்தில் உள்ளது. மஹாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. நடப்பாண்டில் கர்நாடகா ரூ. 4.30 லட்சம் கோடியை விட அதிக வரிவசூல் பங்களிப்பை கொடுத்துள்ளது. நாங்கள் 100 ரூபாய் வரிவசூல் செய்து, அதை மத்திய அரசிடம் கொடுத்தால், மத்திய அரசு எங்களுக்கு 12 ரூபாய் முதல் 13 ரூபாய் வரைதான் தருகிறது என்று குறிப்பிட்டார்.

போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 28 எம்.எல்.சி.க்கள், ஒரு எம்.பி., 5 மேல்சபை எம்.பி.க்கள் உள்பட மொத்தம் 135 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக முதல்வர் சித்தராமையா தலைமையில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் தனி விமானத்தில் தில்லிக்குச் சென்றார்கள். மாநில அரசின் நிதியில் விமானப் பயணம் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது

தில்லி போராட்டம் குறித்த விளம்பரங்களுக்கு அரசின் பொதுநிதி பயன்படுத்துவதைக் கண்டித்து பாஜகவின் எம்.பி.க்கள் ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்கள். போராட்டம் குறித்த விளம்பரத்தை சுட்டிக்காட்டிய பாஜகவினர், இது மாநில அரசின் போராட்டம் அல்ல. இது காங்கிரஸ் கட்சியின் போராட்டம் என்று கண்டித்தார்கள். இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, மத்திய நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். போராட்டத்தை காங்கிரஸ் கட்சி சார்பாக நடத்தியிருக்கலாம். ஆனால், அரசுப் பணத்தில் இதை செய்வதன் மூலம் ஏராளமான நிதி வீணடிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in