காங்கிரஸ் 40 இடங்களில் வெல்ல பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி

"அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்காத காங்கிரஸ், இன்று சமூக நீதி குறித்து பாடம் எடுக்கிறது."
காங்கிரஸ் 40 இடங்களில் வெல்ல பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் கடந்த 5-ம் தேதி உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் இன்று உரையாற்றியபோது அவர் கூறியதாவது:

"குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது உரையில் இந்தியாவின் திறன், வலிமை மற்றும் ஒளிமயமான எதிர்காலம் குறித்துப் பேசினார். அவருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 40 இடங்களில்கூட வெற்றி பெற முடியாது என மேற்கு வங்கத்தில் உங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் 40 இடங்களில் வெற்றி பெற நான் பிரார்த்திக்கிறேன்.

கடந்த காலங்களில் பழைய நாடாளுமன்றக் கட்டத்தில் நாட்டின் பிரதமருடைய குரலை முடக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்றுகூட எனது உரையைக் கேட்கக் கூடாது என்கிற முடிவோடு வந்திருக்கிறீர்கள். மக்கள் எனது குரலைப் பலப்படுத்தியிருக்கிறார்கள். உங்களால் எனது குரலை ஒடுக்க முடியாது. நானும் இந்த முறை தயாராகத்தான் வந்துள்ளேன்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அவர்களது உரையைக் கேட்ட பிறகு எனது நம்பிக்கை மேலும் வலிமை பெற்றது. காங்கிரஸ் தனது சிந்தனையில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. பல ஆண்டுகளாக நாட்டை ஆண்ட ஒரு பெரிய கட்சி, இப்படியொரு வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இதில் எங்களுக்கு மகிழ்ச்சியில்லை, அனுதாபப்படுகிறோம்.

நம் நாட்டின் மிகப் பெரிய நிலப்பரப்பை எதிரிகளிடம் ஒப்படைத்தது காங்கிரஸ். இந்தியாவினுடைய ராணுவம் நவீனமயம் ஆவதைத் தடுத்தது காங்கிரஸ். இந்த காங்கிரஸ் கட்சி இன்று தேசியப் பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு குறித்து பேசுகிறது. தொழில் நிறுவனங்கள் அத்தியாவசியமா, வேளாண் துறை அத்தியாவசியமா என்பதில் அவர்களுக்குக் குழப்பம் இருந்தது. தேசியவாதத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமா, தனியார்மயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமா என்பதில் காங்கிரஸால் முடிவெடுக்க முடியவில்லை. 10 ஆண்டுகளில் பொருளாதாரத்தை 12-வது இடத்திலிருந்து 11-வது இடத்துக்கு கொண்டு வந்தார்கள். நாங்கள் 10 ஆண்டுகளில் 5-வது இடத்துக்குக் கொண்டு வந்துள்ளோம். இந்தக் காங்கிரஸ் கட்சி இன்று பொருளாதாரக் கொள்கைகள் குறித்து நீண்ட நெடிய உரையாற்றுகிறது.

இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முழுமையான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கொடுக்கவில்லை. பொதுப் பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இவர்கள் இடஒதுக்கீடு கொடுக்கவில்லை. பாரத ரத்னா விருதுக்கு அம்பேத்கர் தகுதியானவராகக் கருதவில்லை. குடும்பத்தினருக்கு மட்டும் பாரத ரத்னா விருதை வழங்கி வந்தார்கள். இவர்கள் தான் இன்று சமூக நீதி குறித்து பாடம் எடுக்கிறார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in