அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவேண்டும்: அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த கேஜ்ரிவால், இம்முறை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து ஆஜராகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவேண்டும்: அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
ANI

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை 5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்த கேஜ்ரிவால், இம்முறை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மதித்து ஆஜராகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் துணை முதல்வராக இருந்த சிசோடியாவைக் கடந்த ஆண்டு பிப்ரவரி 26 அன்று சிபிஐ கைது செய்தது. இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி நிர்வாகிகள் பலரது வீட்டில் சோதனைகள் நடைபெற்றன. இதே வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்பியான சஞ்சய் சிங்கும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் தில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ளது. விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு 5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராக மறுத்துவிட்டார். விசாரணைக்கு ஆஜராகாமல் தட்டிக்கழிக்கும் முதல்வர் மீது தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், எதிர்வரும் பிப்ரவரி 17 அன்று அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு ஆஜாரானால், ஜார்கண்டில் நடந்ததுபோல் முதல்வர் கைது செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது. ஆகவே, மாற்று ஏற்பாடுகளைச் செய்து முடித்த பின்னரே கேஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராவார் என்று ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய அமைச்சர் மீனாட்சி லெகி, குஜராத் கலவரம் தொடர்பாக அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியிடம் சி.பி.ஐ. 12 மணி நேரம் விசாரணை நடத்தியது. ஆனால், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலோ அமலாக்கத்துறை விசாரணைக்கு வருமாறு 5 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் ஓடி ஒளிந்து வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

வேறொரு வழக்கு தொடர்பாகவும் கேஜ்ரிவால், சிக்கலை எதிர்கொள்கிறார். 2018-ல் யூடியூபர் துருவ் ரவி என்பவர் பாஜகவுக்கு எதிராக வெளியிட்ட காணொளியை கெஜ்ரிவால் பகிர்ந்திருந்தார். தவறான தகவல்களைச் சித்தரித்த காணொளியைப் பகிர்ந்ததாக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் செய்த மனுதாக்கலை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு தொடர்பாக பிப்ரவரி 29 அன்று நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in