தில்லி ஆர்ப்பாட்டம் - கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொடரும் ஆதரவு: காங்கிரஸ் பங்கேற்குமா?

கோப்புப் படம்
கோப்புப் படம்ANI

தில்லி ஜந்தர் மந்தரில் நாளை மறுநாள் கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகள் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளன. இண்டியா கூட்டணியின் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கேரள அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பங்கேற்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) அரசு, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் கேரளாவுக்கு ₹57,400 கோடி இழப்பு ஏற்பட்டதாக கேரள அரசின் நிதியமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் மாநிலங்களுக்குக் கிடைக்கக்கூடிய நிதியை சரிவர ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து தில்லியில் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நாடு முழுவதும் தர்ணா போராட்டங்களும் நடைபெறவுள்ளன. இதில் கலந்து கொள்ளப்போவதாக திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

எனினும் கேரள அரசின் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைமையிலான கேரளாவின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்) போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மட்டுமல்ல மாநில அரசின் தவறான நிர்வாகமும் நிதிநெருக்கடிக்குக் காரணம் என்று கேரள காங்கிரஸ் கட்சி நம்புகிறது. இதன் காரணமாக பாஜகவுக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது அதில் கலந்து கொள்ளவில்லை.

நிதி ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய அரசைக் கண்டித்து கேரள அரசு போன்று கர்நாடக அரசும் நாளை போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. அதில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் கலந்து கொள்கிறார்கள். இதையெடுத்து, பாஜக அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதில் கர்நாடக காங்கிரஸ் கட்சியைப் பார்த்து கேரள காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேரள நிதியமைச்சர் பாலகோபால் பேசியுள்ளார்.

கேரள காங்கிரஸ் கட்சி தன்னுடைய முடிவைப் மறுபரீசிலனை செய்யும் என்றும் நாளை மறுநாள் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் பிரநிதிகளும் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in