திருமணமாகாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறை செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி வேண்டும் என்ற திருமணமாகாத பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு
திருமணமாகாமல் குழந்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறை செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ANI

இந்தியாவில் குழந்தை பெற்றுக் கொள்வதற்குத் திருமணம் அவசியம் என்றும் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் மேற்கத்திய நாடுகளின் நடைமுறையை இந்தியாவில் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்துள்ளது.

"திருமணம் என்னும் பந்தம் நம்முடைய நாட்டில் நீடிக்க வேண்டுமா இல்லையா? நாம் மேற்கத்திய நாடுகளைப் போன்றவர்கள் அல்ல. காலம் காலமாகத் தொடரும் திருமணம் என்னும் நடைமுறை பாதுகாக்கப்பட வேண்டும். நீங்கள் எங்களைப் பழமைவாதிகள் என்று கூட சொல்லலாம். ஆனால், நாங்கள் குழந்தையின் தரப்பிலிருந்து இதை அணுக விரும்புகிறோம்" என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி வேண்டும் என்று 44 வயதான ஒரு திருமணமாகாத பெண்ணின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது.

"திருமணமாகாமல் தாயாக இருப்பது விதிமுறை அல்ல. ஆனால், தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் திருமண பந்தம் அவசியம் என்பதைத்தான் வலியுறுத்துகிறோம். குழந்தையின் நலன் முக்கியமானது. அது குறித்துதான் நாங்கள் உண்மையான அக்கறை கொண்டுள்ளோம்" என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகர்தனா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் வாடகைத் தாய் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, 35 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களில் கணவனை இழந்தவர்கள் மற்றும் விவகாரத்து பெற்றவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், திருமணமாகாத ஒரு பெண் வாடகைத் தாய் மூலம் தாய் ஆவதை சட்டம் அனுமதிப்பதில்லை.

திருமணமாகாமல் குழந்தை பெற்றுக்கொள்ள விலக்கும் அளிக்கும்படி ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணின் மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்திருப்பதோடு 44 வயதில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று அதை வளர்ப்பதும் கடினம் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in