லிவ் இன் உறவைப் பதிவு செய்யாவிட்டால் சிறை: உத்தரகண்ட் பொது சிவில் சட்டம்

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், சுதந்திர இந்தியாவில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவது இங்குதான் முதன்முறை.
சட்டப்பேரவைக்கு அரசியலமைப்புச் சட்டத்துடன் வந்த உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி
சட்டப்பேரவைக்கு அரசியலமைப்புச் சட்டத்துடன் வந்த உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமிANI

உத்தரகண்ட் சட்டப்பேரவையில் இன்று பொது சிவில் சட்டத்துக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரகண்டில் 2022-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இந்தத் தேர்தலுக்கான வாக்குறுதியாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக தெரிவித்தது. இதன் அடிப்படையில் பொது சிவில் சட்டத்துக்கான மசோதாவை முதல்வர் புஷ்கர் சிங் தாமி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

திருமணம், விவாகரத்து உள்ளிட்ட விஷயங்களில் அனைத்து மதத்துக்கும் பொதுவான ஒரு சட்டத்தை உருவாக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணத்தை செய்வதற்கான நடைமுறைகளுக்கு இந்தச் சட்டம் தடை விதிக்கிறது. உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், சுதந்திர இந்தியாவில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவது இதுவே முதன்முறை. இந்த மசோதாவின் வரைவை வாசிக்கக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டத்துக்கான மசோதாவில் லிவ் இன் உறவு குறித்து இடம்பெற்றுள்ள அம்சங்கள், பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

லிவ் இன் உறவுக்குள் நுழைந்து ஒரு மாதத்துக்குள் உறவு குறித்து முறைப்படி பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

லிவ் இன் உறவில் இருப்பவர்களில் எவரேனும் ஒருவர் தவறான தகவல்களைப் பகிர்ந்துகொண்டால், அவருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

லிவ் இன் உறவில், சம்பந்தப்பட்ட பெண் கைவிடப்பட்டால், அந்தப் பெண், உரிய நீதிமன்றத்தை நாடி லிவ் இன் உறவிலிருந்தவரிடமிருந்து ஜீவனாம்சத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in