நாய் பிஸ்கெட் சர்ச்சை - பாஜகவுக்கு ஏன் நாய்களை பிடிக்கவில்லை?: ராகுல் காந்தி பதிலடி

கிண்டலுக்கு உள்ளான காணொளியைப் பகிர்ந்த பாஜக பிரமுகர்கள், நாயையும் காங்கிரஸ் தொண்டரையும் ராகுல் காந்தி ஒன்றாக நடத்துவதாகக் கருத்து தெரிவித்திருந்தார்கள்
நாய் பிஸ்கெட் சர்ச்சை - பாஜகவுக்கு ஏன் நாய்களை பிடிக்கவில்லை?: ராகுல் காந்தி பதிலடி
ANI

ராகுல் காந்தி ஏன் தன்னுடைய ஆதரவாளர்களை நாய்கள் போல் நடத்துகிறார் என்று பாஜகவினர் எழுப்பிய சர்ச்சைக்கு ராகுல் காந்தி பதிலடி தந்துள்ளார். பாஜகவினருக்கு ஏன் நாய்களை கண்டால் பிடிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளவர், நடந்த சம்பவம் குறித்து விளக்கமும் அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி, ஜார்க்கண்டில் பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை மேற்கொண்டபோது ஒரு நாய்க்குட்டிக்கு பிஸ்கெட் தருவது போன்ற காணொளி சமூகவலைத்தளங்களில் பேசுபொருளானது. அதில் நாய்க்குட்டிக்கு பிஸ்கெட் தர ராகுல் காந்தி முயற்சி செய்தபோது அது சாப்பிட மறுக்கவே, அருகிலிருந்தவரிடம் பிஸ்கெட்டை தருவதாகக் காட்சி பதிவாகியிருந்தது.

சமூகவலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளான அந்தக் காணொளியைப் பகிர்ந்த பாஜக பிரமுகர்கள், ராகுல் காந்தி நாயையும் காங்கிரஸ் தொண்டரையும் ஒன்றாக நடத்துவதாகக் கருத்து தெரிவித்திருந்தார்கள். இதுகுறித்து விளக்கமளித்துள்ள ராகுல் காந்தி, காணொளியில் இருப்பவர் காங்கிரஸ் தொண்டர் அல்ல. நாயின் உரிமையாளர் என்று தெரிவித்துள்ளார்.

"கூட்டத்தைப் பார்த்ததும் நாய் மிரண்டது. பதற்றத்தில் நடுங்கியது. அதற்கு பிஸ்கெட்டை கொடுக்க முயற்சி செய்தபோது பயந்தது. ஆகவே, நாயின் உரிமையாளரிடம் பிஸ்கெட்டைத் தந்து நாய்க்கு தருமாறு கேட்டுக்கொண்டேன். அவர் கையால் பிஸ்கெட்டைக் கொடுத்ததும் நாய் சாப்பிட்டது. இதில் என்ன பிரச்னை என்பது எனக்கு புரியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

காணொளியில் இருப்பது காங்கிரஸ் கட்சியின் தொண்டர் அல்ல என்பதை மறுத்து பேசியவர், பாஜகவுக்கு ஏன் நாய்களின் மீது கோபம்? நாய்கள் அவர்களுக்கு என்ன செய்தன என்பது எனக்கு புரியவில்லை என்றார்.

பாஜக தலைவரான அமித் மால்வியா, ஒரு கட்சியின் இளவரசர் கட்சித் தொண்டர்களை நாய்கள் போல் நடத்துகிறார் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தவர்களில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மாவும் ஒருவர். அவர் முன்னர் காங்கிரஸில் இருந்தபோது அவருக்கு நேர்ந்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். ராகுல் காந்தியின் செல்ல நாயான பீடி, ஒரு தட்டில் இருந்து பிஸ்கெட் சாப்பிட்டதாகவும் அதே தட்டில் மற்றவர்களுக்கும் பிஸ்கெட் வழங்கப்பட்டதாகவும் கூறி அதிர வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in