பாஜகவின் சதி முறியடிக்கப்பட்டது: ஜார்க்கண்டில் ராகுல் காந்தி பேச்சு

சம்பாய் சோரன் தலைமையிலான புதிய அரசு, வரும் திங்கட்கிழமை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருக்கிறது
ஜார்க்கண்டில் ராகுல் காந்தி
ஜார்க்கண்டில் ராகுல் காந்திANI

ஜார்க்கண்ட் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்லைக்க முயன்ற பாஜகவின் சதி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியிருக்கிறார். தன்னுடைய யாத்திரையின் ஒரு பகுதியாக ஜார்க்கண்ட் மாநில எல்லைக்கு வந்த ராகுல் காந்தியைப் புதிய முதல்வராக பதவியேற்ற சம்பாய் சோரன் வரவேற்றார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. நிலக்கரி சுரங்க முறைகேடு, நில மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து புதிய முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் மணிப்பூர் முதல் மும்பை வரை ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, இன்று ஜார்க்கண்ட் மாநில எல்லைக்கு வந்தபோது புதிய முதல்வரான சம்பாய் சோரன் வரவேற்றார். செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, 'ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்தது. இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் உறுதியாக எதிர்த்து நின்றதால் சதி முறியடிக்கப்பட்டது' என்றார்.

சம்பாய் சோரன் தலைமையிலான புதிய அரசு, வரும் திங்கட்கிழமை அன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதி கோரி, சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.

வழக்கு விசாரணையின்போது, ஹேமந்த் சோரனை அனுமதிக்க இயலாது என்று அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதைக் கண்டித்த ஹேமந்த் சோரன் தரப்பு, அமலாக்கத் துறையின் நோக்கம், வழக்கு விசாரணையை மேற்கொள்வது மட்டும்தான். புதிய அரசை உருவாக்கும் அவரது பங்களிப்பைத் தடுக்கக்கூடாது என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றமும் வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதியளித்துள்ளது

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in